சென்னை: அத்தியாவசியப் பொருட்களின் விலையை தேசிய சராசரியை விட குறைவான அளவில் தக்கவைத்து தமிழகமும், கேரளாவும் சாதனை படைத்துள்ளன.
நாட்டில் உள்ள மக்கள், தாங்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சேவைகளின் கட்டணங்களை கணக்கிடுவதே நுகர்வோர் விலைக் குறியீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ்) என்பதாகும். இதை வைத்து நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமை கணக்கிடப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6.2 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரலில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கவலையளிக்கும் விஷயம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பணவீக்கம் நாடு முழுவதும் ஒரே அளவில் இருப்பதில்லை. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. கடந்த ஏப்ரல் நிலவரப்படி சில முக்கிய மாநிலங்களின் பணவீக்க நிலவரம்:
மேற்குவங்கம் 9.12, தெலங்கானா 9.02, ஹரியாணா 8.98, தமிழ்நாடு 5.37, கேரளா 5.08
தமிழகம், கேரளா மாநிலங்கள் பணவீக்க அளவை தேசிய சராசரியைவிட குறைவாக தக்கவைத்துள்ளது சாதனையாகக் கருதப்படுகிறது. உத்தராகண்ட், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரா, பிஹார், சட்டீஸ்கர், டெல்லி போன்ற மாநிலங்களும் தேசிய சராசரியை விட குறைவாக பணவீக்க அளவை வைத்துள்ளன. இருந்தாலும், உள்நாட்டு மாநில மொத்த உற்பத்தி அளவு மற்றும் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலங்களில் பணவீக்கம் அதிகம் இருக்கும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலங்களில் பணவீக்க அளவு குறைவாக இருக்கும்.
ஆனால், உள்நாட்டு மாநில மொத்த உற்பத்தி அளவு மற்றும் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள தமிழகம், கேரளாவில் பணவீக்க அளவு தேசிய சராசரியைவிட குறைவாக இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
காரணம் என்ன?
கரோனாவுக்கு முன் தேசிய அளவைவிட கூடுதலாக பணவீக்கம் இருந்துவந்த தமிழகம், கேரளாவில் பெருந்தொற்றுக்குப் பின் பணவீக்க அளவு குறைந்துவிட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் பணவீக்க அளவு குறைந்து வருகிறது. இந்த மாநிலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவாக கிடைப்பதே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரதான உணவுப் பொருளான அரிசி விலை கடந்த ஆண்டு மே மாதம் கிலோ 57 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு மே 17-ம் தேதி நிலவரப்படி கிலோ 52 ரூபாய்க்கு கிடைக்கிறது. உளுந்து கிலோ 108-ல் இருந்து 102 ரூபாயாகக் குறைந்துள்ளது. துவரம் பருப்பு 16.4 சதவீதம் விலை குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் விலை நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் லிட்டர் 187 ரூபாயிலேயே நீடிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நாடு முழுவதும் விலைவாசியை உயர்த்தியுள்ளது. இப்பிரச்சினை தமிழகத்திலும் உண்டு. இருந்தாலும் தமிழகத்தில் 6.5 சதவீதம் பேர் மட்டுமே கார் வைத்திருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது மாநிலத்தில் போக்குவரத்து செலவை கணிசமாக குறைத்துவிட்டது.
ஒமைக்ரான் பாதிப்புக்குப் பின் தமிழகம், கேரளாவில் பொருட்களின் நுகர்வு குறைந்துவிட்டதும் மற்றொரு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கேரளாவில் பெருந்தொற்றுக்கு முன் நுகர்வோர் விலைக் குறியீடு தேசிய சராசரியைவிட அதிகமாக இருந்தது. பெருந்தொற்றுக்குப் பின் இது குறைந்துவிட்டது.
அங்கு மாநில அரசின் அமைப்பான ‘சப்ளைகோ’ கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேசிய சராசரி விலையை விடக் குறைவாக விற்கப்படுகின்றன. இதுதவிர, பெருந்தொற்று காலங்களில் இலவச உணவுத் தொகுப்பு, வீடு வீடாக வழங்கப்பட்டதும் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நுகர்வோர் விலை குறியீடு கணக்கிடுவது எப்படி?
மக்கள் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் 299 பொருட்களின் விலையில் ஏற்படும் சதவீத மாற்றத்தை வைத்து நுகர்வோர் விலைக் குறியீடு கணக்கிடப்படுகிறது. தேசியப் புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), நாடு முழுவதும் உள்ள 310 முக்கிய நகரங்கள் மற்றும் நடுத்தர ஊர்களில் உள்ள 1,181 கிராமச் சந்தைகள், 1,114 நகர்ப்புறச் சந்தைகளில் இருந்து விலை விவரங்களைப் பெற்று நுகர்வோர் விலை குறியீட்டைக் கணிக்கிறது. இந்த விலை மாற்றத்தை 4 சதவீதம் வரை வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் கடமை. இருந்தாலும் 2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் வரை மாறுபாடுகள் இருக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.