ஐதராபாத் :
தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் உள்ள கல்லூரி பயின்று வருபவர் 19 வயதான இளம்பெண். அந்த இளம் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளம் பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், மாந்தீரிகவாதியிடம் அழைந்து சென்று பேய் ஓட்டும்படியும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை மாந்தீரிகம் செய்யும் ஒரு நபரிடம் அழைத்து சென்றுள்ளனர். அந்த மாந்தீரிகவாதி உங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது. அதை ஓட்டவும், இளம்பெண் குணமடையவும் தீக்குழியில் இறங்குதல் உள்ளிட்ட சில பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது என கூறியுள்ளார்.
அந்த மாந்தீரிகவாதியின் பேச்சை கேட்ட இளம்பெண்ணின் பெற்றோர் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதன்படி, நிலக்கரியால் எரியூட்டப்பட்ட தீக்குழியில் அந்த இளம்பெண்ணை நடக்க வைத்துள்ளனர். நெருப்பு கனலின் வெப்பத்தில் அந்த இளம்பெண் மயக்கமடைந்து தீக்குழியில் விழுந்துள்ளார்.
ஆனாலும், அருகில் நின்றுகொண்டிருந்த அந்த மாந்தீரிகவாதி தீக்குழியில் விழுந்த அந்த பெண்ணை மீண்டும் எழுந்து நிற்கவைத்துள்ளார். இந்த சம்பவத்தில் அந்த இளம்பெண்ணின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரையடுத்து மாந்தீரிகவாதி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்கலாம்…டோக்கியோவில் 24-ம் தேதி குவாட் மாநாடு – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்