சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 3 இடங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடத்தை காங்கிரஸூக்கு திமுக விட்டுக்கொடுத்துள்ளது. அதிமுக சார்பில் 2 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. இவர்களுக்கு பாமக, பாஜக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் , ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கெனவே இரு பதவிகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டிருந்த நிலையில், ஓபிஸ் ஆதரவாளர் ஒருவரும், இபிஎஸ் ஆதரவாளர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அநேகமாக கொங்கு மண்ட லத்தை சேர்ந்த ஒருவருக்கும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.