புதுடெல்லி: சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ற விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு நான்கு நாட்கள் சிபிஐ காவல் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010- 2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பர ஒன்றிய அமைச்சராக இருந்தபோது, பஞ்சாப் மாநிலம், மான்சா பகுதியில் மின் திட்ட பணிகளுக்காக 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் தொகையை முறைகேடாக பெற்று தந்ததாக, தற்போது சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக, சென்னை உட்பட கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 17ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாரணைக்கு ஒத்துழைக்கா ததால், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிபிஐ கோரிக்கையை ஏற்று ஆடிட்டர் பாஸ்கரனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.