ஐதராபாத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு முன்ஏற்பாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் மேடையில் இருந்து கால் தவறி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகையை முன்னிட்டு அவர் பங்கேற்கும் ஷில்பா கலையரங்கு விழா மேடையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு முன்ஏற்பாடுகளை மேடையில் ஏறி அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது புலனாய்வுத் துறையின் உதவி இயக்குநர் குமார் அம்ரேஷ் என்பவர் அந்த கலை அரங்கில் உள்ள மேடையில் நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டே நடந்தார். அப்போது மேடையின் நுனியில் இருந்த வெற்றிடத்தைக் கவனிக்காமல் கால் இடறி கீழே விழுந்தார்.
அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் காணப்பட்ட அவரை மீட்டு அதிகாரிகள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமார் அம்ரேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். புலனாய்வு அதிகாரி குமார் அம்ரேஷ் கால் தவறி விழுந்த விபத்துக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
சம்பவம் குறித்து விவரித்துள்ள போலீசார், குமார் அம்ரேஷ், மேடையின் நுனிப் பகுதிக்கு வந்துவிட்டதை கவனிக்காமல் கால் இடறி தடுமாறி, கீழே இருந்த பள்ளத்தில் விழுந்தார் என்றும் அந்த பள்ளத்தில் விளக்குகள் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கவும், தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கவும் படிகட்டுடன் கூடிய ஒரு சிறிய அறை இருந்தது.
அதற்குள் விழுந்ததால் அவரது தலையின் உட்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.