நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – வெளியான தகவல்

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

40 வருடத்திற்கும் மேலாக, தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக இயங்கி வருபவர் பார்த்திபன். புதுமை விரும்பியான இவர், தனது படங்கள் மூலமாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இவர் இயக்கி, தயாரித்து, நடித்த ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் பார்த்திபன், இந்தப் படம் முழுவதும் தனி ஒருவராக நடித்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருந்ததால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இந்தப்படம் தட்டிச் சென்றது. தற்போது இயக்குநர் பார்த்திபன், இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் 36 வினாடிகள் ஓடக்கூடிய இந்தப்படம், முதன்முதலாக நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உள்ளது.

image

மேலும் இந்தப் படத்திற்காக 3 ஆஸ்கர் விருது வின்னர்கள் இணைந்துள்ளனர். அதன்படி, சவுண்ட் டிசைனர் கிரைக் மான், VFX நிபுணர் கட்டா லங்கோ லியோன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள, இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா சகா, அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ‘மாயவா தூயவா’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘இரவின் நிழல்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. மேலும், ‘இரவின் நிழல்’ படம், தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் விழாவில் சர்வதேச திரைக்கலைஞர்கள் முன்னிலையில் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘இரவின் நிழல்’ திரைப்படம் வருகிற ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.