Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி.. இந்தியாவுக்கு தங்கம்!
துருக்கியில் நடைபெற்ற மகளிருக்கான உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் நிகாத் சரீன்(25) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் நிகாத் வீழ்த்தினார். இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 5வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை நிகாத் பெற்றார்.
IPL 2022: பெங்களூரு அணி வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 18.4 ஓவரில் 2 விக்கெட்டு இழப்புக்கு 170 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.
நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரசின் முன்னாள் தலைவருமான, நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் மற்றொருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்து மற்றும் அவருடன் இருந்த நண்பரும் தாக்கியதாகக் கூறப்படும் 65 வயது நபர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Tamil News Latest Updates
ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாட்கள் வேலை நிறுத்தம்!
நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால், நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், கடந்த 17ம் தேதி நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், குவியல் குவியலாக பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் தோடா பழங்குடியின மக்களை சந்தித்தார். அப்போது முதல்வரை வரவேற்று நடனமாடிய பழங்குடி மக்களுடன் முதல்வரும் சேர்ந்து ஆடினார்.
உதகையில் கேட்ட குரல்:”நல்லா இருக்கீங்களா?, உடம்ப பாத்துக்கோங்க! ஆட்சி சூப்பர்!’அதிலும் ஒரு பெண்,”நான் கருவுற்று இருக்கேன், என்னை வாழ்த்துங்க” – கேட்டபோது உருகினேன்!என்றும் மக்களிடம் செல்! மக்களோடு வாழ்! pic.twitter.com/3jdYdhjwFR
— M.K.Stalin (@mkstalin) May 19, 2022
இலங்கை அரசு திவாலாகி விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கம் 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக, அதிகரிக்கும் என இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசங்க தெரிவித்துள்ளார்.
ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கில், பீகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் 124வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மலர்க் கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறிய 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
நெல்லையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரியும், முறையாக அனுமதி பெறாத குவாரிகளை மூட வலியுறுத்தியும், பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.