கொல்கத்தாவில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜார்கிராமில் நடைபெற்ற திரிணாமுல் தொழிலாளர்கள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், “ சில புலனாய்வு நிறுவனங்களின் உதவியுடன் பாஜக அரசு மத்தியில் துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறது. அரசியல் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் தேசத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கிறார்கள். காவி கட்சி நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அழித்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்து வருவதாக கூறுகின்றனர். மாநிலத்தை இழிவுபடுத்துவதற்காக காவி கட்சி ஒரு தவறான பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இங்கு எப்போது வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை.
துக்ளக் ஆட்சியால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தடுத்து நிறுத்திவிட முடியாது. பணியாளர்கள் தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது. அவ்வாறு அதில் தவறு நடந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.