சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் ஆர்.பிரியா அறிவிக்கை செய்துள்ளார்.
சென்னை மாநகராட்சி முதல் மன்ற கூட்டம் கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற்றது. புதிய பெண் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேயர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் பேசினார்கள். முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் இந்த மாத மன்ற கூட்டம் 30-ந்தேதி காலை 10 மணிக்கு மேயர் பிரியா தலைமையில் நடக்கிறது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கவுன்சிலர்கள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் தங்களது வார்டுகளில் நடந்த தூய்மை பணிகள், குடிநீர், மின்சார தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் ஆய்வு செய்தனர். மண்டல கூட்டங்களிலும் அதனை எடுத்துரைத்தனர்.
குப்பைகளை அள்ள போதுமான ஊழியர்கள் இல்லாமல் அன்றாட தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குப்பையை சேகரிக்கும் பணி ஒரு சில மண்டலங்களில் மட்டுமே தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பணியை செய்து வந்த ஊழியர்கள் ஓய்வுபெற்றதால் காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் குப்பை அள்ளுவதில் தொய்வு ஏற்பட்டு பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் குடிநீர் வாரியம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டையும் கவுன்சிலர்கள் முன் வைக்கின்றனர்.
மண்டல கூட்டங்களில் கூட அவர்கள் பங்கேற்பதில்லை. இது போன்ற நிலை இருந்தால் அடிப்படையான பிரச்சினைகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்படும். நாங்கள் சொல்வதை குடிநீர், மின் வாரிய அதிகாரிகள் கேட்பதில்லை என்று கவுன்சிலர்கள் புலம்புகின்றனர்.
ஒரு சில வார்டுகளில் மட்டுமே அதிகாரிகள் ஒத்துழைப்பு இருப்பதாகவும் பெரும்பாலான வார்டுகளில் அலட்சிய போக்கு நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.