லக்னோவில் வசிக்கும் ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாகக் கூறி, கத்ரா கேசவ் தேவ் கோவில் பகுதியில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி இத்கா மசூதியை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர் கோபால் கண்டேல்வால், “1669-70-ல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் கிருஷ்ணா ஜென்ம பூமியில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.
கிருஷ்ண பகவானை வழிபடுபவர்கள் என்ற முறையில் அவருடைய சொத்துக்களை மீட்டுத் தரக் கோரி வழக்குத் தொடர எங்களுக்கு உரிமை உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியில் மசூதி தவறாகக் கட்டப்பட்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு சமரசம் ஏற்பட்டது, ஆனால் அந்த சமரசம் சட்டவிரோதமானது. எனவே அந்த மசூதி இடத்தை மீட்டு பெரும்பான்மை இந்துக்கள் நம்பும் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்டுத் தரவேண்டும் ”என்று கூறினார். இதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், இதற்கு முன்னதாக மதுராவில் உள்ள சிவில் நீதிமன்றம், “1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை ஏற்க முடியாது. 1992 ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட 16-ம் நூற்றாண்டின் பாபர் மசூதி சம்பந்தப்பட்ட அயோத்தி கோவில்-மசூதி வழக்கு மட்டுமே இந்த சட்டத்திற்கு விதிவிலக்காகும்.
கிருஷ்ண ஜென்ம பூமி வழக்குப் பதிவு செய்யப்பட்டால், ஏராளமான பக்தர்கள் இது போன்ற பல்வேறு வழக்குகளை முன்வைத்து நீதிமன்றத்தை அணுகுவார்கள்” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, “கிருஷ்ணரின் பக்தர்கள் என்ற முறையில் கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் வணங்க எங்களுக்கு உரிமை உண்டு” என மனுதாரர்கள் தங்கள் வழக்கில் வாதிட்டுள்ளனர்.