சென்னையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமானத்தை நோக்கி லேசர் கற்றையை காட்டிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு வியாழன் அதிகாலை, 146 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதிகாலை 4.50 மணி அளவில் விமானம் ஓடுபாதையில் தரையிறங்க இருந்த போது, ஒரு சக்திவாய்ந்த லேசர் கற்றை விமானியின் அறையை நோக்கி வந்தது. அந்த ஒளி விமானியின் கண்களுக்கு நேராக அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும், விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பிறகு இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.
விமான நிலைய அதிகாரிகள், ரேடாரை சோதனை செய்தபோது, பழவந்தாங்கலில் இருந்து லேசர் கதிர் வந்தது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகத்துடன் இணைந்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விமானத்தை நோக்கி லேசர் கற்றையை செலுத்திய நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானத்தின் மீது லேசர் கற்றைகளை சுட்டிக்காட்டுவது ஒரு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது மிக முக்கியமான கட்டத்தில் விமானத்தை கட்டுப்படுத்தும் போது விமானிகளை குருடாக்கும்.
ஏற்கெனவே ஐந்தாண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவங்கள் நடந்தன. நகரின் பரங்கிமலை பகுதியில் இருந்து லேசர் கதிர்கள் விமானங்களை நோக்கி வந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“