சென்னை:
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மெரினா கடற்கரை சாலையில், எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இது , மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள், போலி மதுபாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை ஊடகங்களில் பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் இவ்வளவும் புதைத்து வைக்க முடியாது.
இதுதொடர்பாக, ஒன்றிரண்டு பெண்களை கைது செய்து, கணக்கு காட்டி பிரச்சினையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல்துறை முயல்கிறதோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. சென்னை முதல் குமரி வரை கள்ளச்சாராய விற்பனை ஒரு சில காவல்துறையினர் மற்றும் ஆளும் கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது.
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மலிவு விலை கள்ளச்சாராயத்தை நாடுகிறார்கள்.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இந்த ஆட்சியில் கள்ளச் சாராய மரணங்கள் ஏற்படும் என்று தாய்மார்கள் அஞ்சுகிறார்கள். தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் தாமதம் ஏற்பட்டால், அப்பாவி மக்களின் கள்ளச் சாராய மரணங்களைத் தடுக்க தமிழக தாய்மார்களுடன் இணைந்து வீதியில் இறங்கிப் போராடுவோம் என்று எச்சரிக்கிறேன். மக்களின் உயிரையும், உடமையையும் காக்க அ.தி.மு.க. எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.
கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க காவல்துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.