மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தை, கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில், டைம் மிஷின் கதைக்களத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. அறிமுக இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்தை மிக அற்புதமாக இயக்கி இருந்தார். தமிழில் முதன்முறையாக டைம் மிஷின் வைத்து வந்தப் படம் என்பதால் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இயக்குநர் ஆர்.ரவிக்குமார், தனது அடுத்த படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்டதாக மிக நீண்ட காலமாக இயக்கி வருகிறார்.
‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இஷா கோபிகர், பாலிவுட் நடிகர் ஷரத் கெல்கர், கருணாகரன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசைமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில், போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பூமிக்கு வரும் ஏலியனைச் சுற்றி நடக்கும் கதைக்களம் என்பதால், அதிகளவு VFX பணிகள் உள்ளநிலையில், அதற்கான நிதி நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முழுவீச்சில் படத்தை முடிக்கும் வகையில் படக்குழு பணிகளை செயல்படுத்தி வருவதால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.