திருவனந்தபுரம்: புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மலையாள நடிகரும், தயாரிப்பாளருமானவர் விஜய் பாபு. படங்களில் நடிப்பதற்கு கூடுதல் வாய்ப்பு தருவதாக கூறி ஒரு புதுமுக மலையாள நடிகையை ஓட்டல் உள்பட பல்வேறு இடங்களுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் இவர் மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து விஜய் பாபு வெளிநாட்டில் தலைமறைவானார். துபாயில் அவருக்கு பல்வேறு தொழில்கள் இருப்பதால் அங்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கொச்சி போலீசார் விஜய் பாபுவுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பினர்.இதற்கிடையே முன்ஜாமீன் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்னும் ஒருசில தினங்களில் விசாரணைக்கு வருகிறது. இதனால் இம்மாதம் 20ம் தேதிக்கு பின்னர் விசாரணைக்கு ஆஜராகுவதாக கூறி போலீசுக்கு பதில் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்குள் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்ய கொச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும், அவரை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறும் கூறி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கொச்சி போலீசார் கடிதம் அனுப்பினர்.இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து. மேலும் விஜய் பாபுவை கைது செய்ய கொச்சி நீதிமன்றம் கைது வாரண்டும் பிறப்பித்தது. இந்நிலையில் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது.ஆனாலும் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் வரை போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக விஜய் பாபு துபாயில் இருந்து வேறு நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.. இதையடுத்து அவரை கைது செய்ய அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கொச்சி போலீசார் தீர்மானித்துள்ளனர்.