உக்ரைன் போருக்குத் தப்பி அகதிகளாக அயர்லாந்துக்கு வந்துள்ள உக்ரைன் இளம்பெண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று கூறும் விளம்பரங்கள் இணையதளங்களில் உலாவரத்துவங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் இலாபம் என்னும் மன நிலை கொண்ட மக்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பிரித்தானியர்கள் மட்டும் விதிவிலக்காகிவிடமுடியுமா என்ன!
ஏற்கனவே அகதிகளாக பிரித்தானியா வந்துள்ள உக்ரைன் இளம்பெண்களை பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் அவர்களுக்கு தங்கள் வீடுகளில் இடமளிக்க முன்வந்த பிரித்தானியர்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், உங்கள் போர்க்கால கனவுகளை நிஜமாக்கிக்கொள்ளுங்கள் என்ற வாசகங்களுடன், உக்ரைனிலிருந்து அகதிகளாக வந்துள்ள இளம்பெண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று கூறி அயர்லாந்து இணையதளங்கள் சிலவற்றில் விளம்பரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைன் இளம்பெண்கள் கிடைப்பார்கள் என்பது போன்ற விளம்பரங்கள் அயர்லாந்து இணையதளங்களில் 250 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், பாலுறவுக்கு உக்ரைன் பெண்கள் கிடைப்பார்களா என இணையத்தில் தேடும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஐரோப்பிய மனிதக் கடத்தலுக்கெதிரான நிபுணர் ஒருவர்.
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதியான Valiant Richey என்பவர் கூறும்போது, அயர்லாந்து பாலியல் சந்தை அகதிகள் பிரச்சினையை பயன்படுத்திக்கொள்வதைக் காணமுடிகிறது, உதாரணமாக அயர்லாந்தின் மிகப்பெரிய பாலியல் தொழிலாளிகள் இணையதளம், உக்ரைன் பெண்களுடன் உங்கள் போர்க்கால இன்பக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்துள்ளது என்கிறார்.
உக்ரைன் போர்ச் சட்டப்படி அந்த நாட்டு ஆண்கள் அனைவரும் நாட்டைக் காக்க போராடவேண்டும் என்பதால், அகதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறுபவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள்தான்.
ஆனால், உக்ரைனில் பிரச்சினை என்றதும், ஐரோப்பா அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த விதம், போருக்குத் தப்பியோடும் பெண்கள், பாலுறவுக்குக் கிடைப்பார்களா என ஆண்கள் தேடும் முயற்சியில் இறங்கியதுதான் என்கிறார் Valiant Richey.