நம்ம ஹீரோ சிவசாமியை உங்களுக்கு நல்லா தெரியும். ஆவுடையம்மா மவன். சுப்பிரமனியர் கோவில் வாசல்ல செருப்பு பாதுகாத்துக்கிட்டு, சூடம் நெய் விளக்கு வித்துக்கிட்டு இருப்பாரே அவர்தான். இல்லை இல்லை நீங்க நினைக்கிற ஆளில்லை, மிச்ச எல்லாரும் வேட்டி கைலி கட்டி வியாபாரம் பண்ணும் போது இவரு மட்டும் பேண்ட் போட்டிருப்பாரே, சட்டையில ஒரு பித்தான் இருக்காது, இன்னொரு பித்தான் தப்பா மாட்டிருக்குமே… ஆங்…அவருதான்.
கருப்பு பேண்ட் கலர் போய் பிரவுன் கலர் ஆனதா, இல்லை வெள்ளை பேண்ட் அழுக்காகி அழுக்காகி இந்த கலர்ல இருக்கான்னு சிவசாமிக்கே தெரியாது.
சிவசாமி பொஞ்சாதி ராஜபுஷ்பம் கிராமம் என்றாலும், நல்ல கேள்வி கேட்கிற அறிவு உண்டு. படிப்பு குறைவுதான். மூத்த மகனை அரும்பாடுபட்டு மிலிட்டரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில சேர்த்ததில் ரொம்ப சந்தோஷம். இரண்டாவது மவன் தறுதல. ஏழு வருஷம் இன்ஜினிரிங் படிச்சுக்கிட்டு ஊர சுத்தும். ஊர சுத்துனா பரவாயில்லைன்னு ராஜபுஷ்பம் செல்லம் கொடுக்க, பைக்கில போகும் போது ரோட்டுல சும்மா போனவன, கெட்ட வார்த்தை சொல்லி காலால் எட்டி உதைக்க, அவன் போலீஸ்ல சொல்லி, தறுதல வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் ஜெயில் சாப்பாட்டை சந்தோஷமா சாப்பிட்டு, அத வாட்ஸ் அப்பில ஸ்டேட்டஸ் போட்டு, அம்மா அப்பாவுக்கு பாரமாவே இருந்துச்சு.
பணம் வசதி குறைவுன்னாலும், பத்துப்பொருத்தம் சேர்ந்த கல்யாணம் என்பதால், சிவசாமிக்கும் ராஜபுஷ்பத்துக்கும் நல்ல புரிதல் இருந்தது. கோவில் விஷேச நாட்களில், சிவசாமிக்கு ஒத்தாசையா ராஜபுஷ்பமும் வியாபாரத்துக்கு நிக்கும்.
ஊர்த்திருவிழா அன்னைக்கு அப்படி ரெண்டு பேரும் நின்னு வியாபாரத்தைக் கவனிக்கும்போது, ஒரு பெரிய ஃபாரீன் கார்ல ஒரு அரசியல் கட்சியின் முக்கிய புள்ளியான மந்திரம்மூர்த்தி, மூன்று கார் நிறைய தன் படைகளுடன் கோவிலுக்கு வந்தார். சிட் பண்டு, ரியல் எஸ்டேட்ன்னு ஒவ்வொரு மகனுக்கும் தொழிலும் வாழ்க்கையும் வச்சிக் கொடுத்து அரசியல் செல்வாக்கோடு இருந்த மந்திரமூர்த்தி கோவிலுக்கு உள்ளே போகும்போது, தன் செருப்பை சிவசாமி கடையில் விட்டு விட்டு, ராஜபுஷ்பத்தை பார்த்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தார்.
மந்திரமூர்த்தி பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடும்போது, அடப்பாவி மக்கா, இப்படி வெள்ளை வேஷ்டி சட்டை போட்டு ஜோரான வாழ்க்கை வாழுகிற இவனைப் போயி வேண்டாம்னு சொல்லிட்டு, இந்த மனுஷன் பேண்ட் போட்டிருக்காரேன்னு கல்யாணம் பண்ணேம்பாருன்னு, ராஜபுஷ்பம் மனதில் நினைக்க…….
நல்லவேளை, இவ வேண்டாம்னு சொன்னா, இல்லைன்னா நானும் இப்ப சூடம் தான் வித்துக்கிட்டு இருப்பேன்னு சொல்லி, பிள்ளையாருக்கு இன்னும் கூடுதலாக மூணு தோப்புக்கரணம் போட்டார் மந்திரமூர்த்தி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.