கலாம் கனவை நனவாக்கும் திருமாறன்.. ‘பிராண வாயு உற்பத்தி’ பணியில் மாணவர்கள்!

த. வளவன் 

தென்  மாவட்ட மாணவ மாணவியரை ஒருங்கிணைத்து  “ஒரு மாணவர் ஒரு மரம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை மறைந்த அப்துல் கலாம் பெயரில் நடவு செய்திருக்கிறார்  நெல்லை மாவட்டம்   வெங்காடம்பட்டி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்  திருமாறன்.

பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடுகள் மழையைத் தருவதுடன நிலச்சரிவையும்  குறைக்கின்றன.  கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது. புவியின் தட்பவெட்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன.

காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்கிறது. இதனால் பூமியில் வெப்பம் அதிகரித்து பல பகுதிகளில் அதிக மழை, சில பகுதிகளில் வறட்சி  என காலநிலை வேறுபாடு ஏற்படுகிறது. கடலோரப் பகுதிகளில் மரங்கள் வளர்க்கப்படும் போது அலைகளை கட்டுப்படுத்தும் சக்தி மரங்களுக்கு உண்டாகிறது. புவியைக் காத்தால் தான் உயிரினங்களைக் காக்க முடியும்.

இந்தியாவில் 33 சதவிகித அளவுக்கு இருந்த காடுகள் குறைந்து தற்போது 22 சதவிகித காடுகள் மட்டுமே உள்ளன. இந்த 11 சதவிகிதத்தை அடைய வேண்டும் என்றால் 54 கோடி மரங்களை நட வேண்டும். வனத்துறை மட்டுமே இந்தப் பணியை செய்ய முடியாது. எனவே நாமும் ஆளுக்கொரு மரம் நட வேண்டும்.

காடு வளர்ப்பு என்பதை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை, அமிலத்தன்மை, வளம், எந்த மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்த ஆய்வையும் நாம் மேற்கொள்ள வேண்டும். அப்படியானால் தான் நமது மண்ணையும் மனிதர்களையும் காப்பாற்ற முடியும் என்கின்றனர்   இயற்கை ஆர்வலர்கள்,

பருவநிலை மாற்றத்தால் இந்தியா, பாகிஸ்தானில் வெப்ப அலை பலமடங்கு அதிகரிக்கும் என்றும், இனி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த  நிகழ்வு நடைபெறும் விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் தருணம் வந்து விட்டது. அதனால் தான் இந்த வருடம் மார்ச் மாதமே வடமாநிலங்களில் 120 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது என்கின்றனர்.

இந்த நிலையில் ஒரே வருடத்தில் ஒரு லட்சம் மரங்களை நடவு செய்திருக்கும் திருமாறனிடம்  பேசினோம். தனியொரு மனிதனாக ஒரு லட்சம் மரங்களை நடவு செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. இதனால் தான் மரங்களை  நடவு செய்ய மாணவர்களை தேர்ந்தெடுத்தேன். ஒரு மரத்தை நடவு செய்தால் அவர்களுக்கு பிராணவாயு உற்பத்தியாளர் என்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்பதை பல்லள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளைக் கொண்டு அறிவிப்பு செய்ய செய்தேன். அதன் விளைவாக நிறைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து எங்களுக்கு அழைப்புகள் வந்தன. சுமார் ஆயிரம் பள்ளிகள், பத்து கல்லூரிகள் என்று தென்மாவட்டங்களை சுற்றி வந்து ஒரு லட்சம் மரக்கன்றுகளை  அப்துல் கலாம்  பெயரில் நடவு செய்திருக்கிறோம். நட்ட கன்றுகளை பாதுகாக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். 

வரும்  2031 ஆண்டு அப்துல்கலாமின் நூறு வயது பிறந்த நாளுக்குள் இந்தியாவின் அனைத்து பள்ளிகளையும் சென்றடைய திட்டங்கள் உள்ளன. அதன் முதல் கட்டமாக மகாராஷ்டிரா ரோட்டரி சங்கம் மூலம் பள்ளிகளில் மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நட அடுத்த மாதம் கிளம்புகிறோம். அதற்காக மராத்தி மொழியில் பிராணவாயு உற்பத்தியாளர்கள் சான்றிதழ் தயாராகி கொண்டிருக்கிறது என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.