பொதுத்தேர்வுகளில் பிடிபட்ட 5 கிலோ பிட் பேப்பர்- தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் சஸ்பெண்டு

நாமக்கல்:
தமிழகத்தில் கடந்த 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வும், கடந்த 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 பொதுத் தேர்வும், 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வும் தொடங்கியது.
இதில் நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் 82 மையங்களில் மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். தேர்வு மையங்களுக்கு 82 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 82 துறை அலுவலர்கள், 14 கூடுதல்துறை அலுவலர்கள், 1,200 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பாட புத்தகங்களை மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பராக மாற்றினர்
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி (திங்கட்கிழமை) பிளஸ்-1 வகுப்புக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளி விபரங்கள் உள்பட 11 பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தது. அப்போது இணை இயக்குனர் ெபான்குமார் கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு ஜி.டி.ஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு பணி மேற்கொள்ள காரில் சென்றார். அப்போது சோளக்காடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை, டீக்கடைகளில் மாணவர்கள் அதிக அளவில் கூட்டமாக நின்றனர்.
இதை கண்டு சந்தேகம் அடைந்த இணை இயக்குநர் பொன்குமார் காரை நிறுத்தி விட்டு அந்த கடைகளுக்குள் சென்றார். அங்கு மாணவர்கள் பிட் அடிப்பதற்காக பாட புத்தகங்களை சிறிய வகையிலான மைக்ரோ ஜெராக்ஸ் பிரிண்ட் எடுத்துக் கொண்டு இருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இணை இயக்குநர் பொன்குமார் மற்றும் பறக்கும் படையினர் மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து, அங்கிருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மறுநாள் 17-ந்தேதி பிளஸ்-2 கணிதம், விலங்கியல், வணிகம், நர்சிங் உள்பட 10 பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இதில் மாணவர்கள் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய இணை இயக்குனர் பொன்குமார் தனியாக ஒரு பறக்கும் படை குழுவினரை கொல்லிமலைக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் வாழவந்திநாடு உண்டு உறைவிட பள்ளியில் தேர்வு தொடங்குவதற்கு முன்பே அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கினர். அவர்கள் பறக்கும் படையினரிடம் குவியல் குவியலாக மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை கொடுத்தனர்.
இதேபோல் பறக்கும் படை குழுவினர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை நடத்தினர். அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுபோல் பள்ளிபாளையம் அரசு பள்ளியில் இருந்தும் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில மாணவர்கள் சோதனையின் போது தாங்கள் மறைத்து வைத்திருந்த பிட் பேப்பர்களை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். மொத்தம் 5 கிலோ பிட் பேப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்வில் பிட் அடிக்க மாணவர்கள் தொடர்ந்து மைக்ரோ சைஸ் பிட் பேப்பர்கள் கொண்டு வந்ததால் நாமக்கல் மாவட்ட கல்விதுறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த பிட் பேப்பர்களை தயார் செய்து கொடுத்த சம்பந்தப்பட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறையின் தேர்வு விதிமுறைகளை மீறி எத்தனை நாட்களாக மாணவர்களுக்கு பள்ளி பாடபுத்தகங்களை மைக்ரோ சைஸாக மாற்றி தேர்வில் பிட் அடிப்பதற்கு எடுத்துக் கொடுக்கிறீர்கள்? என கேட்டும், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் பிட் அடிக்க ஏன் உதவினீர்கள் என கேட்டும் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் தேர்வு மையங்களில் பிட் பேப்பர் பிடிப்பட்ட வகுப்புகளில் பணியாற்றி வரும் 11 தேர்வறை கண்காணிப்பாளர்களை இன்று சஸ்பெண்ட் செய்து தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர்கள் சரியாக செயல்படவில்லை என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தேர்வு அறைகளில் இன்று முதல் மாற்று கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.