முதன் முதலாக அஜித்தை ’தல’ என அழைத்தவர் ’தீனா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர் மகாநதி சங்கர். ஒயின் ஷாப் ஒன்றில் அஜித்துடன் சங்கர் பேசும் முதல் வார்த்தையே ‘வா தல’ என்பதுதான்.
இந்தப் படத்துக்குப் பிறகே அஜித்தை அவரது ரசிகர்கள் ‘தல’ என அழைத்துக் கொண்டாடத் தொடங்கினர்.
இந்த ’தல’ பட்டம் அஜித்துடன் சேர்ந்தது குறித்து ‘தீனா’ பட இயக்குநர் எ.ஆர்.முருகதாஸும், சம்பந்தப்பட்ட அந்தக் காட்சி குறித்து நடிகர் மகாநதி சங்கருமே தங்களது பல பேட்டிகளில் பேசியுள்ளனர்.
இப்போது விஷயத்துக்கு வருவோம்.
அஜித்தின் ‘தல’ வரலாறைத் தொடங்கி வைத்த மகாநதி சங்கர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அஜித்துடன் இணைந்திருக்கிறார். ஆம், ‘அஜித் 61’ படத்தில் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஐதராபாத்தில் தொடர்ந்து நடந்துவரும் ‘அஜித் 61’ ஷூட்டிங்கில் கடந்த வாரம் கலந்து கொண்டாராம் சங்கர். இது குறித்து படம் தொடர்புடைய நம்பகமான சிலரிடம் பேசினோம்.
“சங்கர் சார் படத்துல கமிட் ஆகியிருக்கிறார்னு அரசல் புரசலா கேள்விப்பட்டப்ப நாங்க முதல்ல நம்பலை. ஆனா திடீர்னு ஒருநாள் அவரை ஷூட்டிங்ல பார்த்ததும் எங்க எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சியா இருந்தது. இதுல இன்னொரு ஹைலைட் என்னன்னா, ஷூட்டிங் ஸ்பாட்டுல சங்கர் சாரை அஜித் சார், புதிய சிலருக்கு அறிமுகப்படுத்தி வச்சப்ப, ’இவர்தான் முதன்முதல்ல என்னைத் ‘தல’ன்னு கூப்பிட்டவர்’னு சொல்லியேதான் அறிமுகப்படுத்தி வச்சார்.
சமீபத்துல ‘என்னைத் தல’னு இனி யாரும் கூப்பிட வேண்டாம்’னு அறிக்கையே வெளியிட்ட நிலையில தற்போது அவரே சங்கர் சாரை இப்படி அறிமுகப் படுத்தி வச்சது பெரிய ஆச்சர்யமா இருந்தது. மனுஷன் பழசை மறக்காம இருக்கார்” எனச் சிலிர்த்தபடி பேசினார்கள் அவர்கள்.
‘தீனா’வுக்குப் பிறகு ‘ரெட்’, ‘ஆஞ்சநேயா’ என இரு படங்களில் அஜித்துடன் நடித்த மகாநதி சங்கர், அதற்குப் பிறகு இப்போதுதான் அஜித் படத்தில் நடிக்கிறார்.