இந்தியாவில் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள்
தென்மேற்கு பருவமழை
காலமாகவும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளன.
இவற்றில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தை தவிர பிற தென் மாநிலங்களும், பெரும்பாலான வடமாநிலங்களும் மழையை பெறுகின்றன. தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் இந்த பருவ காலத்தில் அதிக மழையை பெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மே 27 ஆம் தேதி, தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது வானிலையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றத்தின் காரணமாக மே 23 ஆம் தேதியே பருவமழை ஆரம்பித்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்ச், ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மழை பெய்து வருகிறது, அண்மையில் உருவான அசானி புயல் காரணமாக அக்னி நட்சத்திர காலத்திலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, தென்மாவட்டங்களிலும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.