புதுதில்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை 4 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009-2014-ம் ஆண்டு காலகட்டத்தில், மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, 263 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டு லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிதாக வழக்கு பதிவு செய்தது.
கார்த்தி சிதம்பரம் தனது ஆலோசனை சேவைகள் மற்றும் விசா சேவைகள் வழங்கும் நிறுவனம் மூலம் போலி ரசீதுகள் வழங்கி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் சோதனை நடத்திய போது, இந்த ஆவணங்கள் சிபிஐ-க்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் தற்போது கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு உட்பட மொத்தம் 10 இடங்களில் சிபிஐ இரண்டு நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது. கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்ததால், இது தொடர்பாக அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை சிபிஐ கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 4 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.