கர்நாடக மாநிலத்தில், 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இருந்து, தந்தை பெரியார் பாடம் நீக்கப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான
பாஜக
ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், சமூக சீர்திருத்தவாதிகளான
நாராயண குரு
மற்றும் பெரியார் பற்றிய பாடங்கள் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் உரையை பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது விவாதமான நிலையில், இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மாநில பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் புதிய சமூக அறிவியல் பாடநூலின் பிடிஎஃப் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பகுதி 5 சமூக, மத சீர்திருத்த இயக்கங்கள் என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றிருக்கிறது. அந்தப் பாடத்தில் பிரம்ம சமாஜ் நிறுவிய ராஜாராம் மோகன் ராஜ், ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த் சரஸ்வதி, பிரார்த்தன சமாஜ் நிறுவிய ஆத்மாராம் பாண்டுரங், ராமகிருஷ்ண மிஷனை தோற்றுவித்த ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் பற்றி தகவல் உள்ளது. ஆனால் பெரியார், நாராயண குரு பற்றி முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த தகவல்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து காங்கிரஸ் கட்சி பிரமுகர் எல்.ஆர்.லோபோ கூறுகையில், “நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகளை மீண்டும் சேர்க்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும். பாஜக அரசு சமூக சீர்திருத்தவாதியை ஓரங்கட்டுகிறது. நாராயண குரு வெறும் பிராமணராக மட்டும் இல்லாமல், “ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரு கடவுள்” என்ற கோட்பாட்டைப் போதித்த ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். சமூக சீர்திருத்தவாதிகள் பற்றி, அவர்கள் நம் இளம் தலைமுறைக்கு என்ன கற்பிப்பார்கள்?” என தெரிவித்தார்.
இதற்கு, கர்நாடக மாநில தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் அளித்த பதிலில் கூறியதாவது:
சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீ நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டு உள்ளன என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க இந்த மாதிரியான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எப்போதும் இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தவே விரும்புகிறது. அவர்கள் அதை திட்டமிட்டுச் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.