மத்திய அரசை குறை கூறுவதை தவிர்த்து, பருத்தி சாகுபடியை தீவிரப்படுத்தினால் மட்டுமே ஜவுளிப் பிரச்சனை தீரும் என்று, பாஜகவின் விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதப் பிரதமருக்கு பருத்தி விலையை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், பருத்தி பதுக்கலை கண்காணிக்க வேண்டுமென்றும் கடிதம் எழுதுகிறார். மத்திய அரசு பருத்திக்கான இறக்குமதி வரியை 11% ரத்து செய்துவிட்டது. ஆனாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. உண்மையில் தமிழகத்தில் பருத்தி சாகுபடி குறைந்து போனதே தமிழகத்தில் இன்றைய ஜவுளிப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம்.
இந்தியாவிலுள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கையில் 60% தமிழகத்தில் மட்டுமே உள்ளன. 893 பெரிய நூற்பாலைகளும், 792 சிறிய நூற்பாலைகளும், 3.20 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட நெசவுத்தறிகளும், 142 கூட்டுறவு சங்கங்களும், 15,000-த்திற்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனங்களும் உள்ளன.
பருத்தியை மூலப்பொருட்களாகக் கொண்டே மேற்கண்ட தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றை நம்பி 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது. தமிழகத்தில் பருத்தி தேவை ஒரு கோடி பேல்கள். ஆனால் உற்பத்தியோ ஆறு இலட்சம் பேல்கள் மட்டுமே. எனவே பஞ்சு தேவைக்காக மகாராஷ்டிரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களின் பருத்தி உற்பத்தியை நம்பி வேண்டியிருக்கிறது.
இன்றைய நிலையில் குஜராத்தில் நூற்பாலைகள் அதிகரித்துவிட்டது. அவர்கள் தேவைபோகவே மீதம் தமிழகத்திற்கு கிடைக்கும். தெலுங்கானாவில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியில் 5% மட்டுமே உள்மாநில உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 95% வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் பருத்தி சாகுபடி குறைவாக இருப்பதால் வெளிமாநிலங்களிலிருந்து 94% கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றால் பஞ்சுவிலை அதிகரிக்கிறது, தட்டுப்பாடு ஏற்படுகிறது. நூற்பாலைகள் இலாபகரமாக இயங்கமுடிவதில்லை. சுயசார்பை தமிழகத்தில் உருவாக்க நினைப்பதாக கூறும் தமிழக முதல்வர், உடனடியாக தீவிர பருத்தி சாகுபடியைத் துவக்க வேண்டும்.
“தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்றழைக்கப்பட்ட கோவையில் பஞ்சு உற்பத்தி அறவே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே தனிவாரியம் அமைத்து பருத்தி சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகளுடைய ஆட்கள் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல் ஆகியவற்றிற்கு நிரந்தரத்தீர்வு கொடுத்து, தமிழகத்தில் நூற்பாலைகள் சிறப்புடன் இயங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி கே நாகராஜ் தெரிவித்துள்ளார்.