Varsha Sriram
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் முன்னாள் பிரதமருடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பு தங்களுக்கு ‘அநீதி’ என்று தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ் காந்தி மட்டுமல்லாமல், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தியன்எக்ஸ்பிரஸ்.காம் அவர்களில் சிலரின் குடும்பங்களைக் கண்டுபிடித்து, அவர்களின் வாழ்க்கை அன்றைக்கும் இன்றைக்கும் இப்படி மாறியுள்ளது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அவர்களுடன் பேசியது.
அனசுயா டெய்சி எர்னஸ்ட், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி
தற்போது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அனசுயா டெய்சி எர்னஸ்ட், குண்டுவெடிப்பு நடந்தபோது ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். பலத்த காயம் அடைந்து, தீக்காயங்கள் மற்றும் துகள்கள் உடலில் பாய்ந்திருந்ததால் அவர் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் அனசுயா டெய்சி எர்னஸ்ட்.
1988 ஆம் ஆண்டு தடா நீதிமன்றம் ஏழு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது தான் எப்படி உணர்ந்தேன் என்பதை நினைவுகூர்ந்த அனசுயா, “அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். எங்களுக்கு உண்மையான நீதி வழங்கப்பட்டுள்ளதாக உணர்ந்தேன். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் மேல்முறையீடு செய்யும்போது தண்டனையின் வகை குறைந்து கொண்டே வந்ததால், இந்த குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொண்டதாக நான் பார்த்தேன். இப்போது அவர்கள் முற்றிலும் விடுதலையாகிவிட்டனர் என்பதை உணர்ந்தேன்.
இது இந்த நீதி அமைப்பு எப்படி குறைபாடுடையதாக உள்ளது, அது நம் நாட்டில் காகிதத்தில் மட்டுமே உள்ளது என்பதை காட்டுகிறது” என்று அவர் கூறின.ர் “இந்த ஆறு பேரையும் விடுவித்தால், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களையும் விடுவிப்பார்களா? எல்லோரையும் விடுவிக்கும் போது, அவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாளும் தங்களது 31 ஆண்டுகால சிறைவாசம் குறித்து பேசியது குறித்து பேசிய அனசுயா, “ஆனால், அவர்களை இவ்வளவு காலம் சிறையில் இருக்கச் சொன்னது யார்? அவர்களின் மரண தண்டனையை நீதிமன்றம் பின்பற்றியிருந்தால், அவர்கள் இந்நேரம் போய் சேர்ந்திருப்பார்கள்.
“ஒரு நிரபராதியாக, நான் இன்றுவரை வலியுடன் வாழ்ந்து வருகிறேன், அதனால் ஒரு குற்றவாளி சுதந்திரமாக வெளியேறுவதை நான் பார்க்கும்போது, அது என்னைத் தொந்தரவு செய்கிறது” என்று அவர் கூறுகிறார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் ‘விஐபி’களாக நடத்தப்பட்டதாக அனசுயா நம்புகிறார். பல ஆண்டுகளாக, அவர்கள் (தண்டனை விதிக்கப்பட்டவர்கள்) பரோலில் வெளியே வந்து, தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டனர். இன்றும், ஏதோ பெரிய காரியம் செய்தது போல் அவர்களுக்கு விஐபி உபசரிப்பு அளிக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மரியாதையுடன் வரவேற்று பேரறிவாளனின் தாயாரை அம்மா என்று அழைத்தார். அவர் எனக்கும் இவ்வளவு மரியாதை கொடுப்பாரா?” என்று அனசுயா கேட்கிறார்.
குண்டுவெடிப்பில் மகிளா காங்கிரஸ் தலைவர் சாந்தானி பேகம் கொல்லப்பட்டார். இவருடைய மகன் அப்பாஸ் (40) இப்போது செல்போன் கடை உரிமையாளராக உள்ளார்.
அவருடைய தாயார் சாந்தானி பேகம் கொல்லப்பட்டபோது 10 வயதாக இருந்த அப்பாஸுக்கு, பேரறிவாளனின் விடுதலையானது 31 ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நினைவுபடுத்துகிறது.
“என்னுடைய தாயை இழந்தபோது நான் இரண்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் – அவர் தென் சென்னை மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதற்கு சில வருடங்களுக்கு முன் என் தந்தையை இழந்திருந்தேன். நாங்கள் ஏழு குழந்தைகள், ஐந்து சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள், என் அம்மாதான் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார்.
தற்போது 40 வயதாகும் அப்பாஸ், தனது தாயார் கொல்லப்பட்ட நாளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். “நாங்கள் வீட்டில் தனியாக இருந்ததால் என் அம்மாவை கூட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் என் சகோதரர் தடுக்க முயன்றது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், அது எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியாக இருந்ததால் அவர் செல்ல வேண்டியிருந்தது” என்று அவர் கூறுகிறார்.
அப்பாஸ், “குழந்தைகள் பெற்றோர் இல்லாமல் வளர்வது ஒரு போராட்டம்” என்று கூறினார். “எனது உடன்பிறந்தவர்களும் நானும் எதிர்கொண்ட போராட்டங்களை விளக்க வார்த்தைகள் இல்லை. இன்றுவரை அது எங்களை வேட்டையாடுகிறது” என்று அவர் கூறுகிறார். சில செல்வாக்கு மிக்க பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக வேலைகள், எல்பிஜி விநியோக மையங்கள் உள்ளிட்ட பல கிடைத்தாலும், அப்பாஸ் தனது குடும்பம் புறக்கணிக்கப்பட்டதாக கூறினார். “நான் டெல்லியில் ராஜீவ் காந்தியின் குடும்பத்தினரை சந்தித்து உதவி கோரி பல கடிதங்களை அனுப்பினேன். ஆனால், அவர்களின் அலுவலகத்தில் உள்ளவர்கள் எனது கடிதங்களை அனுப்பவில்லை என்று நினைக்கிறேன். இந்த வழக்கில் உள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் எங்களிடம் ஆதரவைக் கோருகிறார்கள். ஆனால், மற்ற நேரங்களில் எங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்” என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் அனுபவித்த எல்லாவற்றுக்கும் பிறகு, நேற்று தீர்ப்பைப் பற்றி கேள்விப்பட்டபோது, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்… இது அநீதி. தீர்ப்பை எப்படி ஏற்க முடியும்?” அவர் கேட்டார்.
பேரறிவாளன் மட்டும்தான் பாதிக்கப்பட்டாரா என்று கேள்வி எழுப்பிய அப்பாஸ், “என் அம்மா பிளாஸ்டிக் பையில் வீடு திரும்பினார். அந்த படம்தான் எனக்கு ஞாபகம் வந்தது. ஏன் எங்களின் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை? அவருக்கு (பேரறிவாளனுக்கு) இது 31 வருட துன்பம், ஆனால், எங்களுக்கு அது வாழ்க்கை முழுவதுக்குமான துயரம்” என்று கூறினார் அப்பாஸ்.
இந்த தீர்ப்பை அடுத்து முதல்வர் உட்பட அனைவரும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது அப்பாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “மக்கள் கொண்டாடுவதைப் பார்க்கும்போது, எனக்கு நினைவுக்கு வருவது, நானும் எனது குடும்பத்தினரும் எப்படி கண்ணீர் சிந்தினோம், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைப் பெறுவதற்கு எப்படிப் போராடினோம்… ஏன் எங்களைப் பற்றி யாரும் நினைப்பதில்லை?” என்று அப்பாஸ் கேள்வி எழுப்புகிறார்.
குண்டுவெடிப்பில் பலியான போலீஸ் கான்ஸ்டபிள் தர்மன், அவருடைய மகன் ராஜ்குமார், ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தர்மன் காஞ்சிபுரத்தில் சிறப்புப் பிரிவு தலைமைக் காவலராக இருந்தார். இந்தச் சம்பவத்தை விவரித்த தர்மனின் மகன் ராஜசேகர், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் முன்பு கூறியது: “நாங்கள் கோடை விடுமுறையைக் கழிக்க சென்னைக்கு அருகிலுள்ள ரெட் ஹில்ஸில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் சகோதரிக்கு 10 வயது, என் சகோதரனுக்கு 5 வயது.”
தர்மனின் இளைய மகன் ராஜ்குமார் கூறுகையில், தனது தந்தை இறந்தவுடன், அவரது தாயார் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டும். “அந்த நாளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. ஆனால், எப்படியோ, வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற்றோம்” என்கிறார்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை ராஜ்குமார் பொருட்படுத்தவில்லை. “பாருங்கள், அவர் 31 ஆண்டுகளாக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்துள்ளார். மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு 9-வோல்ட் பேட்டரிகளை அவர் வாங்கியதால், அவரது வழக்கு வேறுபட்டது. இது உண்மையா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறுகிறார்.
“பேரறிவாளன் சிறையில் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்கு ஒரு விஷயமில்லை. ஏனென்றால், கடைசியில் அது எங்கள் தந்தையை எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கப்போவதில்லை. நாங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தொடர்ந்து வாழ்கிறோம்” என்று அவர் கூறினார்.
ஆனால், தீர்ப்புக்குப் பிறகு பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட மரியாதை மற்றும் நடத்தப்பட்டதைப் பார்க்கும்போது வருத்தமாக இருப்பதாக ராஜ்குமார் கூறினார். “நான் இன்று முதல்வரைச் சந்திக்க விரும்பினால், அது மிகவும் கடினமாக இருக்கும், ஏனென்றால், நான் ஒரு சாதாரண மனிதன். ஆனால், சமீபத்தில் விடுதலையான ஒரு குற்றவாளி, முதல்வரைச் சந்தித்து, கட்டிப்பிடித்து ராஜ உபசாரம் பெறுவது எப்படி? அதுமட்டுமில்லை, மக்கள் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுகிறார்கள், இது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்துகிறது” என்று அவர் கூறுகிறார். “இந்தக் குற்றவாளிகள் பெறும் முக்கியத்துவத்தை நாம் ஏன் பெறவில்லை?” என்று அவர் கேட்கிறார். விரைவில் இப்பிரச்னையை அரசிடம் எடுத்துரைக்க விரும்புவதாகக் கூறினார்.
எட்வர்ட் ஜோசப், குண்டுவெடிப்பில் கொலையான போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய சகோதரர் ஜான் ஜோசப் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
மாநில செயலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற எட்வர்ட் ஜோசப்பின் சகோதரர் ஜான் ஜோசப்தான், இந்த வழக்கில் குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனி மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த குண்டுவெடிப்பில் ஆசிரியராக இருந்த எட்வர்டின் மனைவியும், 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகள்களும் தனிமையில் இருந்தனர்.
“எட்வர்ட் கொல்லப்பட்டபோது அவருக்கு 39 வயது, நான் அவரைவிட மூன்று வயது இளையவன். நான் சென்னையில் என் வீட்டில் இருந்தபோது ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அவருக்கு விபத்து நடந்ததாக என்னிடம் கூறினார். நான் பிணவறையை அடையும் வரை, அவர் இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரியாது” என்று ஜான் நினைவு கூர்ந்தார். “அனைத்து குடும்பங்களுக்கும் துன்பம் இருந்தது, இன்றுவரை தொடர்ந்து இருக்கிறது. இந்த தழும்புகள் எளிதில் அழியாது.” என்று ஜான் ஜோசப் கூறினார்.
“இந்த வழக்கு, குறிப்பாக பேரறிவாளன் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஒவ்வொருவரும் (அரசியல் கட்சிகள்) அவருடைய விடுதலைக்காகக் உரிமை கோர விரும்புகிறார்கள்” என்கிறார் ஜான் ஜோசப். ராஜீவ் காந்தி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் பங்கு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குற்றவாளிகள் எதில் இருந்தும் தப்பிக்கலாம் என்பதையே இது காட்டுகிறது. இனி இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று ஜான் ஜோசப் கேட்கிறார். இந்த தீர்ப்புக்குப் பிறகு நடந்த கொண்டாட்டங்களைப் பற்றி கேள்வி எழுப்பினார். “தீர்ப்புக்குப் பிறகு மக்கள் சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கின்றனர், நடனமாடுகிறார்கள். இப்படிக் கொண்டாட்டங்கள் நடத்தும் அளவுக்கு பேரறிவாளன் சுதந்திரப் போராட்ட வீரரா? நாங்கள் எந்த இழப்பீடுக்கும் தகுதியானவர்கள் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“