தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – மழை தொடர்பான மாவட்ட செய்தித்துளிகள்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா,குமரிக்கடல்,  தமிழக கடலோரப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மழை தொடர்பான சில செய்தித்துளிகள்:-
கன்னியாகுமரி:
குமரியில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் கொள்ளளவை நோக்கி உயர்ந்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் அணையில் இருந்து ஒரு சில நாட்களில் உபரிநீர் வெளியேற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
சத்தியமங்கலம் :
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று மதியம் சத்தியமங்கலம் நகர்ப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக அரை மணி நேரம் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
ஆத்தூர், சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோடை மழையால் எள் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் எள் பயிரிட்டுள்ளனர். 90 நாள் பயிரான எள் நன்கு விளைந்திருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிலோவுக்கு 150 ரூபாய் வரை விலை போகும் என நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் எண்ணத்தில் கோடை மழை இடியாய் இறங்கிவிட்டது. திடீரென பெய்த மழையில் எள் செடிகள் எல்லாம் வீணாகிவிட்டதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் கடற் பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வழக்கம் போல ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் துவங்கி ஜூலை ஆகஸ்ட் வரை கோடை காலம் என்பதால் உப்பு உற்பத்தி தொழில் அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடம் உப்பு உற்பத்தி தொழில் துவங்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் உப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் உப்பள தொழிலாளர்கள் மழை நீரை வெளியேற்ற முடியாமலும் விளைந்த உப்புகளை வார முடியாமலும் தவித்து வந்தனர். இதனால் உற்பத்தியாளர்கள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி தொழிலை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
தருமபுரி – கிருஷ்ணகிரி மாவட்ட மாவட்டங்களை இணைக்கும் வகையில் பஞ்சப்பள்ளி தேன்கனிக்கோட்டை இடையில் உள்ள மலைப் பகுதியில் மலை மீது புள்ளேஹள்ளி, ஆலப்பட்டி போன்ற மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் உள்ள புள்ளேஅள்ளி ஏரியில் மழைக் காலங்களில் வரும் தண்ணீர் நிரம்பி மலைக்கு கீழே அருவியாக கொட்டுகிறது. இந்த தண்ணீரானது பஞ்சப்பள்ளி அருகே உள்ள பெரியனூர் ஏரிக்கு செல்கிறது. கோடைமழை ஒரு வார காலமாக பெய்து வருவதால், மலை மீது உள்ள புள்ளேஹள்ளி ஏரி நிரம்பி மலைகளில் தண்ணீர், ஆங்காங்கே அருவியாக கொட்டுகிறது. மிக உயரத்திலிருந்து கொட்டும் இந்த அருவியில் பஞ்சப்பள்ளி ஏழுகுண்டூர் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களும் இளைஞர்கள், சிறுவர்கள் என தினமும் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் ஒரு மாத காலம் வரும் என்பதால், பெரியனூர் ஏரியை சுற்றுயுள்ள மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுராந்தகம், செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்தவேடந்தாங்கல் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த கொள்முதல் நிலையத்தில் வழங்க சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசின் நேரடிக் கொள்முதல் நிலையத்தில் நெல்லை போடுவதற்காக கடந்த ஒரு மாத காலமாக கொள்முதல் செய்யப்படும் வளாகத்தில் நெல்லை கொட்டி பாதுகாத்து வருகின்றனர் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக கொட்டி வைக்கப்பட்ட நெல் நனைந்து முளைத்து வருகின்றன இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் ஆகவே நனைநத விவசாய நெல்களை விரைந்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒகேனக்கல்:
வரலாறு காணாத அளவில் கோடை காலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 50,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடைகால மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 5000 கன அடியாக இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 5000 கன அடியிலிருந்து 7500 கன அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து தமிழக, கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு கோடை மழை தீவிரம் அடைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
தளவாடி மலைப்பகுதி:
தமிழக பகுதியான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கோலா அணை நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பெய்த மழை நீர் ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடியது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் நீரோட்ட சரிவு காரணமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று சேருகிறது. தாளவாடி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சிக்கோலா அணைக்கு சென்று சேர்ந்தது. இதன் காரணமாக சிக்கோலா அணை நீர்மட்டம் உயர்ந்து அணையின் முழு கொள்ளளவான 74 அடியை எட்டியது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் தற்போது அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.