சென்னை: சென்னைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு மாதவிடாய் மற்றும் நாப்கின் பயன்பாடு குறித்து வரும் 28-ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், இதை பெண் கவுன்சிலர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், பெண் கவுன்சிலர்களுக்கான நகர்ப்புற சுகாதாரம் மற்றும் பாலினம் குறித்த கருத்தரங்கை மேயர் பிரியா துவக்கி வைத்து பேசிய மேயர் பிரியா, “சமூகத்தில் பெண்கள் பல இன்னல்களை தாண்டி தான் முன்னேற முடிகிறது. ஒவ்வொரு பெண்ணும், கணவர், குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்டோர் அடங்கிய குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொண்டுதான், இலக்கை அடைய முடிகிறது. இதுபோன்று அனைத்து பெண்களாலும் முடிவதில்லை. ஒருசில பெண்களால் மட்டுமே சவால்களை தாண்டி வெளியே வர முடிகிறது.
துாய்மைப் பணி போன்றவற்றில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இரவில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் அடிப்படை வசதிகளை பெண் கவுன்சிலர்களாகிய நாம் தான் ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களின் இன்னல்கள் குறித்து மற்றவர்களை விட, நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல், பள்ளி சிறுமியரிடையே மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பருவமடைந்த சிறுமியருக்கு மாதவிடாய் குறித்த புரிதல் இல்லாமல் உள்ளது. எனவே, வரும் 28-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மாதவிடாய், நாப்கின் பயன்பாடு குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவற்றை, பெண் கவுன்சிலர்கள் முன்னின்று நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், “சென்னை மாநகராட்சியில் சரிபாதி பெண் கவுன்சிலர்கள் இருக்கிறீர்கள். எனவே, பெண்களுக்கு கழிப்பறை வசதி, அவற்றை முறையாக பராமரித்தல், பெண்களின் பாதுகாப்பு ‘சிசிடிவி’ கேமரா பொருத்துதல், தெருவிளக்கு அமைத்தல் போன்றவற்றை முன்னின்று ஏற்படுத்தி தர வேண்டும். சில நேரங்களில் நீங்கள் செல்வதை அதிகாரிகள் செய்யவில்லை என்றால் தொடர்ந்து சொல்லுங்கள்; நிச்சயம் செய்வார்” என்று தெரிவித்தார்.