நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வந்துள்ளது. அதில் 14-ம் தேதி நள்ளிரவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் 350 அடி அழம் கொண்ட குவாரிக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
குவாரியில் பணியாற்றியபோது பாறை சரிவுக்குள் சிக்கிக் கொண்ட ராஜேந்திரன் உடல் இருக்கும் இடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் உடல் அங்குள்ள பெரிய பாறைக்கு அடியில் கிடக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவதால் அந்த பாறையை வெடிவைத்துத் தகர்க்கும் பணி இன்று நடந்தது. 32 இடங்களில் துளைகள் போடப்பட்டு அதில் ஜெலட்டின் குச்சிகளை வைத்து வெடிக்க வைத்தனர்.
வெடிக்க வைக்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணி தற்போது நடக்கிறது. அதன் பிறகே ராஜேந்திரனின் உடல் கிடக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியும் என தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்து விட்டனர். தீயணைப்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்குக் காரணமான குவாரியின் ஒப்பந்ததாரர் சங்கரநாராயணன், மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், குவாரியின் உரிமையாளரான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
குவாரி உரிமையாளரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோர் மங்களூரு நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில், தனிப்படை போலீஸார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். இருவரும் நாளை நெல்லை அழைத்து வரப்படவுள்ளனர்.
இதனிடையே, திசையன்விளையில் உள்ள கல்குவாரி உரிமையாளர் சேம்பர் செல்வராஜின் வீட்டில் நேற்று போலீஸார் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் வணிகர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் திரும்பிவிட்டார்கள். இந்தச் சூழலில் இரவில் அவரது வீட்டை மர்ம நபர்கள் உடைத்து. அங்கிருந்து எதை எடுத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை.
கொள்ளையர்களை கண்டுபிடித்து விடுவதைத் தடுக்கும் வகையில் வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுவிட்டனர். பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தது யார், எதை எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.