திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே இரட்டை ரயில் பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் நாகர்கோவில் உள்பட 21 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருவனந்தபுரம்- மங்களூரு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திருவனந்தபுரத்திலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு செல்வதற்கு கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரண்டு பாதைகள் உள்ளன. இதில் கோட்டயம் வழியாக உள்ள பாதையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டது. இங்குள்ள சிங்கவனம்-ஏற்றுமானூர் பாதையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டால் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருவுக்கு கோட்டயம் வழியாக உள்ள பாதையில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விடும். இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகளுக்காக இன்று முதல் 28ம் தேதி வரை கோட்டயம் பாதையில் ஓடும் 21 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம் வருமாறு: மங்களூரு- நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் (16649) இன்று முதல் வரும் 28ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு- கன்னியாகுமரி ஐலன்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (16526) 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி- பெங்களூரு ஐலன்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (16525) 24 முதல் 28 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூரு- நகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் (16649) 20 முதல் 28 வரையிலும், நாகர்கோவில்-மங்களூரு பரசுராம் எக்பிரஸ் (16650) 21 முதல் 29 வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை- திருவனந்தபுரம் மெயில் (12623) 23 முதல் 27 வரையிலும், திருவனந்தபுரம்- சென்னை மெயில் (12624) 24 முதல் 28 வரை யிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (16791) 27ம் தேதியும், பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் (16792) 28ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாகர்கோவில்-கோட்டயம் எக்ஸ்பிரஸ் (16366) கொல்லம் வரை மட்டுமே செல்லும். கோட்டயம் பாதை வழியாக செல்லும் மொத்தம் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 23 ம் தேதி இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. 28ம் தேதி முதல் கோட்டயம் இரட்டை பாதையில் ரயில்கள் ஓடத் தொடங்கும்.