கலிபோர்னியா: மலேசிய நாட்டில் ஸ்டார்லிங்க் புராஜக்டின் கீழ் சாட்டிலைட் மூலமாக இணைய சேவையை வழங்க எலான் மஸ்கின் ஸ்பேஸ்-X நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-X நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 32 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-X பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இப்போது ஸ்டார்லிங்க் இணைய சேவை மலேசியாவில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதனை மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார் அந்நாட்டின் அமைச்சர் முகமது அஸ்மின் அலி. இருந்தாலும் விரைவில் இந்த திட்டம் உறுதி செய்யப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய தொழில்நுட்பம் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்கின் வரவு அந்த நாட்டில் அதிவேக இணைய சேவையை பெற உதவும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஊரக பகுதிகளுக்கான இணைய சேவை இதன் மூலம் சிறப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார்லிங்க் நிலை நிறுத்தியுள்ள சாட்டிலைட்களுக்கு தேவையான முக்கிய காம்போனென்ட்களை மலேசிய நிறுவனம் ஒன்றுதான் வழங்கி வருகிறதாம். இந்நிலையில், தங்கள் நாட்டில் ஸ்டார்லிங்கின் வரவு மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் தங்களது நிறுவனங்களின் பங்கீடு வரும் நாட்களில் இருக்கும் என விண்வெளி சார்ந்த தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டு வரும் மலேசிய நிறுவனங்கள் நம்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.