வேலைக்கார பெண்ணை அடித்து துன்புறுத்திய டெல்லி தம்பதியினர்

புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியைச் சேர்ந்த ரஜனி (வயது 48) என்ற பெண், ஒரு ஏஜென்சியின் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள ஒரு தம்பதியரின் வீட்டில், வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு ரஜனிக்கு மாத சம்பளமாக ரூ.7000 கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தம்பதியினரான அபினீத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, ரஜனி உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறார், அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். அதன்பின்னர், ரஜனியை ஏஜென்சிக்கு அழைத்து சென்ற தம்பதியினர் அங்கு அவரை விட்டு சென்றுள்ளனர்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த ரஜனியை ஏஜென்சியினர் டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது, அந்த வீட்டில் உள்ளவர்கள் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தலைமுடியை வெட்டியதாகவும் ரஜனி கூறியுள்ளார். மேலும், ரஜனி உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது, மருத்துவ அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டது. ரஜனி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் கன்ஷியாம் பன்சால் கூறுகையில், “மே 17-ம் தேதி சப்தார்ஜங் மருத்துவமனையில் இருந்து புகார் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல், தம்பதியினர் நெடுங்காலமாக ஏஜென்சியுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். ரஜனி பணியில் சேருவதற்கு முன் வேறு ஒரு பெண்ணை பணியில் அமர்த்தியுள்ளனர். அந்த பெண் திருடுவதாகவும், உணவில் விஷம் கலந்ததாகவும் கூறி அவரை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.