9-ம் இடத்திலிருந்து 3-ம் இடம்; டாடா மோட்டார்ஸ் முன்னேறியது எப்படி? – திருப்புமுனை – 12

2006 முதல் 2016-ம் ஆண்டு வரை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்திய கார் சந்தையில் இடமில்லை. 2015-ம் ஆண்டில் இந்திய கார் சந்தையில் 9-வது இடத்தில் இருந்தது டாடா மோட்டார்ஸ். அந்தளவுக்கு பல சிக்கல்களைச் சந்தித்தது. ஆனால், கடந்த நிதி ஆண்டில் இந்திய கார் பிரிவில் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், தற்போது ஐ.சி.இ இன்ஜின் பிரிவில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். தவிர, எலெக்ட்ரிக் கார் பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்த டாடா மோட்டார்ஸ் முன்னணிக்கு வந்தது எப்படி சொல்வதுதான் இந்த வார திருப்புமுனை.

1945-ம் ஆண்டு…

கிழக்கிந்திய ரயில்வே நிறுவனத்திடம் இருந்து ரூ.25 லட்சத்துக்கு ஜாம்ஷெட்பூரில் உள்ள ஆலையை டாடா குழுமம் வாங்கியது. இதுதான் தற்போதைய டாடா மோட்டார்ஸுக்கு அடித்தளம்.

99-ம் ஆண்டு டாடா இண்டிகா ரோல்அவுட்

தற்போது கார் நிறுவனமாக அறியப்பட்டாலும் தொடக்கக் காலத்தில் வர்த்தக வாகனப் பிரிவில்தான் முன்னணியில் இருந்தது. 1966 முதல் 1979-ம் ஆண்டு வரை புனேயில் ஒரு பெரிய ஆலையை டாடா மோட்டார்ஸ் அமைத்தது. அப்போது நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் சுமந்த மூல்ககர் (Sumant Moolgakar). சுமந்த ஓர் ஆலையை அமைக்கவில்லை. ஒரு புதிய இண்டஸ்ரியை உருவாக்கினார். அவருக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தந்தார் ஜே.ஆர்.டி டாடா.

சியாராவும் சபாரியும்…

இன்னோவேஷன் என்னும் சொல்லைப் பலரும் தற்போது பயன்படுத்துகிறார்கள். ஆனால், டாடா குழுமம் வாகனப் பிரிவில் பல இன்னோவேஷன்களை உருவாக்கி இருக்கிறது.

டாடா கார் தொழிற்சாலை, புனே

வர்த்தக வாகனத்தில் டாடா பிரபலமாக இருந்ததால், அது தொடர்பான பயணிகள் வாகனத்தையும் தயாரித்தது. 1991-ம் ஆண்டு டாடா சியரா, 1992-ம் ஆண்டு டாடா எஸ்டேட், 1994-ம் ஆண்டு டாடா சுமோ, 1998-ம் ஆண்டு டாடா சபாரி என பல வாகனங்களை அறிமுகம் செய்தது. ஆனால் இவை முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனம் கிடையாது.

தோல்வி அடைந்த இண்டிகா…

அதனால் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை கொண்டுவர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 1998-ம் ஆண்டு டாடா இண்டிகா அறிமுகம் செய்யப்பட்டது. டாடா பிராண்ட் என்பதால், 1.15 லட்சம் நபர்கள் முன்பதிவு செய்தனர்.

ஆனால், இந்த கார் மாபெரும் தோல்வியில் முடிவடைந்தது. வாகனத்தில் சத்தம், அதிர்வுகள், செயல்பாடு எனப் பல கோளாறுகள் இருந்தன. அதுவரை கார் பிரிவு என்றில்லாமல், டாடா மோட்டார்ஸ் மூலமாகத்தான் சுமோ உள்ளிட்ட கார்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், கார் பிரிவு தொடங்கப்பட்டு, பெரும் செலவில் உருவாக்கப்பட்ட இண்டிகோ பெரும் தோல்வியில் முடிவடைந்ததால், அந்தப் பிரிவை விற்கலாம் என யோசனை தரப்பட்டது. ரத்தன் டாடாவும் விற்கலாம் என போர்டு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

டாடா இண்டிகோ

அலட்சியப்படுத்தியது ஃபோர்டு நிறுவனம். பயணிகள் வாகனத்தைத் தயாரிக்க தெரியாத உங்களுக்கு எதற்கு இந்த வேலை என போர்டு அதிகாரிகள் அலட்சியபடுத்தினார்கள். இது ரத்தன் டாடா மற்றும் உயரதிகாரிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

நிறுவனத்தை விற்கும் முடிவை கைவிட்டு, அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலாவது, சிக்கலை சரிசெய்ய வேண்டும். சந்தையில் இருக்கும் வாகனங்களைத் திருப்பி அழைத்து, சரிசெய்ய வேண்டும், மேலும், புதிய இண்டிகா உருவாகும் பணியைத் தொடங்க வேண்டும். இரண்டாவது, இதனால் ஏற்பட்ட சுமார் 600 கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும். மூன்றாவது, வெளிநாட்டுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்னும் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியது.

18 மாதங்களில் இண்டிகா வி2 என்னும் புதிய பிராண்டை உருவாக்கி சாதனை படைத்தது. மிக விரைவாக ஒரு லட்சம் கார்கள் என்னும் புதிய இலக்கையும் எட்டியது.

டாடா ஏஸ் என்னும் குட்டி யானை…

அதன் பிறகு டாடா அறிமுகப்படுத்திய டாடா ஏஸ் இன்னொரு பெரிய வெற்றி. குட்டி யானை என்று சொன்னால்தான் இந்த வாகனம் எல்லோருக்கும் தெரியும். ‘இன்னோவேஷன் என்னும் வார்த்தைக்கு டாடா ஏஸ் வாகனம் உதாரணம்’ எனப் பத்திரிகைகள் எழுதின.

இண்டிகோ பிராண்டு மூலம் ஏற்பட்ட நஷ்டம் நிறுவனத்துக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருந்தாலும், ஆர். அண்ட் டி-க்கு செலவு செய்ய டாடா குழுமம் தயங்கவில்லை. தொடர்ந்து முதலீடு செய்தது.

டாடா ஏஸ் குட்டி யானை

அப்போது டாடா நிறுவனத்தின் 407 அல்லது 709 வாகனங்கள் பலவும் பிரபலம். இவை தவிர மூன்று சக்கர வாகனங்கள்தான் பிரதானம். அப்போது இந்தியாவில் நான்கு வழிச்சாலைகள் (2000-ம் ஆண்டுகளின் தொடக்கம்) அமைக்கப்பட்டன. நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்டன. ஆனால், சிறிய அளவிலான பொருள்களை விநியோகம் செய்வதற்கு வாகனங்கள் இல்லாமல் இருந்தன. அப்போது நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சந்தையில் உரையாடினார்கள். மூன்று சக்கர வாகனத்தைவிட நான்கு சக்கர வாகனம் கூடுதல் திறன் கொண்டது. தவிர, சந்தையில் ஒரு மதிப்பும் கிடைக்கும் என டிரைவர்கள் கருத்து தெரிவிக்கவே, குறைந்த பொருள்களை அதிக தூரம் கொண்டு செல்லும் `டாடா ஏஸ்’ உருவாக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு மே மாதம் இந்த பிராண்டு ரூ.2.25 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

சர்வதேச விரிவாக்கம்

பயணிகள் வாகனப் பிரிவை ஃபோர்டுக்கு விற்பனை செய்ய முயற்சித்து அவமானப்பட்டதால் சர்வதேச அளவில் பெரிய அளவுக்கான விரிவாக்கப் பணிகளை செய்யத் தொடங்கியது டாடா மோட்டார்ஸ். அமெரிக்கச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் பட்டியலிடப்பட்டது. கொரியா, தாய்லாந்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட தொடங்கியது டாடா.

டாடா நானோவுடன்…

இந்த சமயத்தில் கதையில் ஒரு ட்விஸ்ட். சில ஆண்டுகளுக்குமுன்பு அவமானப்படுத்திய ஃபோர்டு தன்னுடைய முக்கியமான இரு பிராண்டுகளை, ஜாகுவார் மற்றும் லாண்ட் ரோவர் என்னும் பிராண்டுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டது. இந்த இரண்டு பிராண்டுகளையும் டாடா மோட்டார்ஸ் வாங்கியது. லாண்ட் ரோவர் சரியாக செயல்பட்டாலும், ஜாகுவாருக்கு நல்ல பெயர் இல்லை.

சிக்கலை ஏற்படுத்திய டாடா நானோ…

சர்வதேச நெருக்கடி தொடங்கியது. பணப்புழக்கம் குறைந்தது. பெரும் தொகை நிறுவனத்தை வாங்குவதற்கு செலவு செய்ததால் கடன் அதிகரித்தது. அதே சமயம், பணப்புழக்கம் குறைந்ததால் சொகுசு கார்களின் விற்பனையும் குறைந்தது. 2008-ம் நிதி ஆண்டில் 2,168 கோடி ரூபாய் லாபம் என்னும் நிலையில் இருந்த டாடா மோட்டார்ஸ் அடுத்த நிதி ஆண்டில் ரூ.2,505 கோடி அளவுக்கு நஷ்டம் என்னும் நிலைக்கு சரிந்தது.

டாடா நானோ

இதுபோல, பல சிக்கல்கள் இருந்ததால், இந்திய சந்தையைக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது. புதிய மாடல்கள் ஏதும் இல்லை. ஆனால், டாடா நானோவில் மொத்த கவனமும் இருந்தது. சிக்கல்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் வந்தது. டாடா நானோவும் பெரிய வெற்றி இல்லை. டாடா மோட்டார்ஸ் முன்னேறும் வேகம் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டிருந்தது.

வந்தார்   குந்தர்…

இந்தச் சூழலில், கடந்த 2016-ஆம் ஆண்டு குந்தர் புட்செக் (Guenter Butschek) தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்களும் பல புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்துகொண்டே இருந்தன.

டாடா மோட்டார்ஸ்

அவர்களுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கிற மாதிரி, நெக்ஸான், அல்ட்ராஸ், டிகோர், பஞ்ச் உள்ளிட்ட மாடல்கள் சந்தையில் அறிமுகப்படுத்தி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இதில் நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய மாடல்கள் எலெக்ட்ரிக் கார்களாகவும் இருக்கின்றன. நிறுவனத்தின் 14 மேனேஜ்மென்ட் பிரிவுகள் இருந்தது, ஐந்தாக குறைக்கப்பட்டது.

இந்தியாவின் டெஸ்லா…

2020-ம் ஆண்டு நெக்ஸான் இவி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்திய எலெக்ட்ரிக் சந்தையில் டாடாவின் இடத்தை யாரும் நெருங்க முடியாது. இந்திய இ.வி சந்தை இப்போது ஆரம்ப காலத்தில் இருந்தாலும், 1% மட்டுமே இ.வி கார்கள் என்றாலும், டாடா எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை, விலை குறைவு. மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களின் விலை சற்று அதிகம்.

எலெக்ட்ரிக் கார்கள்

மேலும், இ.வி.க்கு என பிரத்யேக துணை நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் டி.பி.ஜி என்னும் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது. டாடா பவர் நிறுவனம் இந்தியா முழுவதும் சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைத்து வருகிறது. இ.வி-ல் கிடைத்திருக்கும் ஆரம்பகால வெற்றியைத் தக்கவைக்குமா, மூன்றாம் இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறி, இந்தியாவின் டெஸ்லாவாக டாடா ஆகுமா என்பதே இப்போது கார் உலகின் முக்கியமான கேள்வி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.