விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 8 பட்டியல் சமூக குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்… ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்திற்கு தனியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல முறை அம்மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஆனால், நிலையான சுடுகாடு அமைத்து தராமல்… சூழ்நிலைக்கு ஏற்ப தற்காலிக இடங்களை மட்டும் அதிகாரிகள் அமைத்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு அந்த கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்ற பட்டியல் சமூகப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலையான சுடுகாடு இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் கேட்டு வருவாய்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர் அந்த பெண்மணியின் உறவினர்கள்.
அதன் அடிப்படையில், விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு இடத்தை தேர்வு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறந்த பெண்மணியின் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது, “கோயில் அருகிலேயே இருக்கிறது. அதனால் இங்கு உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம்” என கூறி மற்றொரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடமின்றி இன்னலுக்கு உள்ளாகிய பட்டியல் சமூக மக்கள், தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்து இறந்தவரின் உடலை எடுக்காமல் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கொட்டியாம்பூண்டி ஊரில் உள்ள ஒரு ஓடையின் அருகே தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு உயிரிழந்த அமுதாவின் உடல் வைக்கப்பட்டு இன்று மாலை எரியூட்டப்பட்டது. மேலும், வருகின்ற 26-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பட்டியல் சமூக மக்களுக்கு சுடுகாடு அமைப்பதற்கு மாற்று சமூக நபர் ஒருவர் தனது நிலத்தை வழங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.