சென்னை: கடப்பாக்கம் ஏரியை புரனமைத்து சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் திட்டப் பணிகளை சென்னை மாநகராட்சி விரைவில் தொடங்கவுள்ளது.
சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 16-வது வார்டில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நீரை கடப்பாக்கம், கன்னியம்மன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடப்பாக்கம் ஏரியை புரனமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கொசஸ்தலையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டவரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்ட நிதியின் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.55.34 கோடி செலவில் ஏரியை புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
இதனைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை மற்றும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டது. இந்த அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏரியை சீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கவுள்ளது.
இதன்படி ஏரியை சென்னையின் சுற்றுசூழல் பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த ஏரி புரனமைக்கப்பட்டு ஏரியை சுற்றி நடைபாதை, சைக்கிள் பாதை, புதிய நுழைவு வாயில், பூங்கா, வாகன நிறுத்துமிடம், சிறுவர் விளையாட்டு திடல், சூரிய மின்விளக்குகள் அமைத்தல், செயற்கை நீருற்று ஆகிவைகள் அமைக்கப்படவுள்ளது. மேலும், தூர்வாரும் பணிகள் மூலம் ஏரியில், 0.3 – 0.35 டி.எம்.சி. கொள்ளளவு தண்ணீரை தேக்க முடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.