ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர்ஜே பாலாஜி
மூக்குத்தி அம்மன் படத்தை அடுத்து ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் வீட்ல விசேஷம். இப்படத்தில் அவருடன் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜூன் 17ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.
அப்போது பேசிய ஆர்ஜே பாலாஜி, இந்த கல்லூரிக்கு எப்போது வந்தாலும் நான் ரொம்ப ஆச்சரியமாக பார்ப்பேன் . அதாவது ஒவ்வொரு டெஸ்க்கிலும் இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள் என்று உட்கார்ந்திருப்பார்கள். இதுபோன்ற ஒரு சமநிலை வேறு எந்த கல்லூரியிலும் நான் பார்த்ததில்லை. முக்கியமாக சிறுவயதிலிருந்தே ஆண்களை பெண்களுடனும் பேசக்கூடாது என்று பொத்தி பொத்தி வளர்ப்பதால் பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் போய்விடுகிறது.
நமது சினிமாவிலும் பெண்கள் குறித்து தவறான புரிதலை காட்டுகிறார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், ரஜினி நடித்த மன்னன் படத்தில் நன்றாக படித்து ஒரு கம்பெனியை நிர்வாகம் செய்யும் விஜயசாந்தியை கெட்டவள் போன்றும், வீட்டில் அம்மாவுக்கு காபி போட்டுக் கொடுக்கும் குஷ்புவை நல்லவர் போன்று காட்டி இருப்பார்கள்.
அதேபோன்று தான் ரஜினி நடித்த படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த ரம்யா கிருஷ்ணனை கெட்டவர் என்றும், பாமர பெண்ணாக நடித்திருந்த சவுந்தர்யாவை நல்ல பெண் என்று காட்டி இருந்தார்கள். நான் ரஜினியின் ரசிகன் தான் இருந்தாலும் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நமது சமுதாயத்தில் பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்த தலைமுறையாவது சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதை இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆரம்பித்து வைப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இவர் பேசிய இந்த வீடியோவை அவரது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் பாலாஜி. இது வைரலானது.