புதுடெல்லி: ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சரணடைய அவகாசம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து, நவ்ஜோத் சிங் சித்து சிறையில் அடைக்கப்பட்டார். பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து மீது கடந்த 1987ம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணை கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.இந்த நிலையில், சித்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா முன்னிலையில், ‘சித்துவுக்கு உடல்நல பிரச்னைகள் உள்ளது. அதனால் சரணடைய சில வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார். ஆனால், அதனை நிராகரித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் எந்த சலுகையும் வழங்க முடியாது. இன்றே (நேற்று) அவர் சரணடைய வேண்டும்,’ என உத்தரவிட்டனர். இந்நிலையில், தனது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து, பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று மாலை சித்து சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் சித்து அடைக்கப்பட்டார்.