காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை செய்த தந்தையால் ஒரு மகள் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இரண்டு மகள்களை அந்த கொடூரத் தந்தை அடித்தே கொன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் – கீதா தம்பதிக்கு ஒரு மகன், 3 மகள்கள் என 4 பிள்ளைகள் இருந்தனர். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த கோவிந்தராஜ், கூலி வேலைக்குச் செல்லும் மனைவியிடம் இருந்து பணத்தை மிரட்டி வாங்கி தினசரி குடித்துவிட்டு வந்து, அவரையும் பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை கோவிந்தராஜ் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தபோது கீதா வெளியே சென்றிருந்த நிலையில், 16 வயது மூத்த மகள் நந்தினியும் 10 வயதான கடைசி மகள் தீபாவும் வீட்டில் இருந்துள்ளனர். போதையின் உச்சத்தில் வந்த கோவிந்தராஜ், அம்மா எங்கே என மகள்கள் இருவரிடமும் கேட்டுள்ளான்.
“ஏன் இப்படி தினசரி குடித்துவிட்டு வந்து அம்மாவை தொல்லை செய்கிறாய்” ? என அவர்கள் இருவரும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கையில் கிடைத்த கம்பி, கட்டை ஆகியவற்றை எடுத்து மகள்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளான்.
முகம், கை, கால், தலைப் பகுதி என கண்மூடித்தனமாகத் தாக்கியதில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமிகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், கோவிந்தராஜை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் விசாரணையில் கோவிந்தராஜுவின் மற்றொரு பெண் குழந்தை அவனது கொடுமை தாங்காமல் கடந்த மாதம் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பெற்ற தந்தையின் குடிப்பழக்கத்தால் 3 பிஞ்சுகள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் பலியான சம்பவம் ஒரகடம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.