க.சண்முகவடிவேல்
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பாலக்கரை பகுதி சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் எடத்தெருவில் நடந்தது. பகுதி செயலாளர் ராஜாமுகமது தலைமை வகித்தார். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு தனது உரையில் பேசியதாவது; “தற்போது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்துவரும் மக்கள்நலன் வளர்ச்சித் திட்டங்களை அதிமுகவினர் புரூடா விடுகிறார்கள் என்கிறார்கள். திருச்சியில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், மேம்பாலங்கள், கல்லூரிகள் எல்லாம் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதுதான். அவர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவரது வழியில் ஸ்டாலினும் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்.
ஸ்டாலின் ஆட்சியில் தான் மும்மாரி மழை பெய்து வருகிறது. சித்திரை மாதத்திலேயே மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் வழக்கமாக திறக்கும் ஜூன் 12 க்கு முன்பே தண்ணீர் திறக்கும் நிலை தற்போது உள்ளது. நல்ல தலைவர் ஆட்சி செய்வதால் தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது. ஆளுநரைக் கண்டால் திமுகவினர் அச்சப்படுகிறார்கள் என கூறினார்கள் ஆனால் உச்சநீதிமன்றமே ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர் என கூறி இருக்கிறது.
நினைத்ததையெல்லாம் சாதிக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார். திருச்சி – தஞ்சை சாலையில் சர்வீஸ் சாலைதான் தேவை என்கிறார் நமது அமைச்சர். ஆனால், இதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தாமதமாகும். தாமதமாகாமல் எடுத்து விட்டால் சர்வீஸ் சாலை. அப்படி இல்லையெனில், இடைநிலை பணியாக துவாக்குடி வரை மேம்பாலம் அமைப்பதற்கான பணி இந்த 5 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்” என்று பேசினார்.
தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சிறப்புரையில் பேசியதாவது; “திராவிட முன்னேற்ற கழகத்தில் நான் அந்த பொறுப்பில் இருக்கின்றேன். இந்த பொறுப்பில் இருக்கின்றேன்’ என்று கூறுவதைக் காட்டிலும், ‘நான் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு தொண்டனாக இருக்கின்றேன்’ என்று சொல்வதில் பெருமை கொள்பவன் தான் திமுககாரன்.
திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டங்களின் பேசுபவர்களிடம் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இது சிங்கங்களின் கூட்டம், ஆட்டுக்குட்டிகளுக்கெல்லாம் இங்கு நாம் பதில் கூறிக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. எவரும் தொட முடியாத உயரத்தில் நமது முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தடுத்த சாதனைகளைப் படைத்து மிகமிக விரைவாக பயணித்துக் கொண்டு இருக்கின்றார்.
கடந்த அதிமுக அரசு நிதிநிலையை ஒண்ணும் ரத்தினம் கம்பளம் விரித்து நம்மை அழைக்கவில்லை. தமிழக மக்களின் ஒவ்வொருவரது தலையிலும் ரூ.75 ஆயிரம் வரை கடனை வைத்து விட்டுத்தான் சென்றுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து வருபவர்தான் வளமான தமிழகம் தரும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இல்லம் தேடிக்கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தது, பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தது, கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது ஆகிய எண்ணற்ற சிறப்புமிக்கவைகளைத் தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. ரூ.5 லட்சம் கோடி கடனில் இருந்த சூழலில் ஆட்சிக்கு வந்தாலும், கொரோனோ காரணமாக ரூ.4000 மக்களுக்கு வழங்கியதற்கும் முதலமைச்சருக்கு நன்றி.
திராவிட மாடல் என்றால் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, சுயாட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை. இந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ஆட்சி செய்கிறார். ஏப்ரல் மாதம் டில்லியில் அங்குள்ள பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து டில்லி முதலமைச்சரும், டில்லி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் விளக்கினார்கள். அப்போது தமிழ்நாட்டின் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் நம் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கி கூறச் சொன்னார்.
அதன்படி நான், இல்லம் தேடிக்கல்வித்திட்டம் குறித்து மிகுந்த வியப்புடன் உணர்ந்து பாராட்டினார்கள். இது நம் ஆட்சியின் ஒரு படி சோறுக்கு ஒரு சோறு பதம் போல தான்” என்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ., எழிலன், தலைமையிடத்துப் பேச்சாளர்கள் தமிழன் பிரசன்னா, தமிழ்தாசன் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் எம்எல்ஏ., இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்எல்ஏ., சேகரன், துணைமேயர் திவ்யா, நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜன், மண்டலகுழு தலைவர்கள் மதிவாணன், ஜெயநிர்மலா, மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் நீலமேகம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார்.