சமையல் எரிவாயு சிலிண்டர், எரிபொருள் விலை கடும் உயர்வு – இலங்கையில் உணவு தட்டுப்பாடு அபாயம்

கொழும்பு: இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிடையே சமையல் எரிவாயு சிலிண்டர், எரிபொருள் ஆகியவை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், உணவுப் பொருட்கள் விலை உயர்வு, வருமான இழப்பு, எரிபொருள் பற்றாக்குறை, மக்கள் போராட்டம், ஆட்சி மாற்றம் என பல்வேறு பிரச்சினைகளில் இலங்கை தவித்து வருகிறது. இப்பிரச்சினைகள் பூதாகரமானதை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச சமீபத்தில் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ரணில் எடுத்து வருகிறார். இலங்கைக்கு 16 கோடி அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,240 கோடி) வழங்குவதாக உலக வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது.

9 அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இதற்கிடையே, அங்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவற்றை பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக்கிடக்கின்றனர். இந்த சூழலில்,கொழும்பு நகரில் மாணவர்கள் கடந்த 19-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்க, மாணவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனாலும், போலீஸாரை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டம் காரணமாக இலங்கையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று கூறியதாவது:

நாட்டில் தற்போது பயிர் செய்வதற்கு தேவையான ரசாயன உரங்கள் எதுவும் இல்லை. இதனால், நெல் சாகுபடி பருவத்தில் உற்பத்தியும் இருக்காது. எனவே, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. உலக அளவில் தற்போது உணவு நெருக்கடி நிலவுகிறது.

வரும் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான சாகுபடி பருவத்துக்கு தேவையான உரங்களை பெற முயற்சித்து வருகிறோம். நாட்டின் இந்த நெருக்கடிக்கு கடந்தகால அரசின் நிர்வாகமே காரணம்.

மக்களுக்கு வேண்டுகோள்

நாம் திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டோம். இதுபோன்ற நிலை இலங்கையில் ஒருபோதும் இருந்தது இல்லை. நம்மிடம் தற்போது டாலரும் இல்லை. ரூபாயும் இல்லை. நாம் நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது. இந்த இக்கட்டான சூழலில், தற்போதைய நிலையை தாங்கிக் கொள்ளுமாறு நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல நாட்களாகவே, பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு மக்கள் சுமார் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ளதால், இதை கருத்தில் கொண்டு இலங்கை அரசு பல முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு அனுமதி பெற்று இயங்கும் அனைத்து பள்ளிகளும் 20-ம் தேதி (நேற்று) முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேபோல, அத்தியாவசிய பணியில் உள்ளவர்கள் தவிர மற்ற அதிகாரிகள் 20-ம் தேதி (நேற்று) முதல் பணிக்கு வர வேண்டாம் என்று இலங்கை பொது நிர்வாக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்தை குறைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா கூறும்போது, “இலங்கை கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெட்ரோலை பெற நாட்டின் கைவசம் அந்நியச் செலாவணி இல்லை.

கப்பல் நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.400 கோடி நிலுவைத் தொகை தர வேண்டும். அதை கொடுத்த பிறகே, மேலும் பெட்ரோல் வாங்க முடியும். எனவே, பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் காத்துக் கிடக்க வேண்டாம்” என்றார்.

சிலிண்டர் விலை ரூ.5,000

சமையல் எரிவாயு சிலிண்டர், எரிபொருள் உள்ளிட்டவை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சிலிண்டர் விலை ரூ. 2,675 ஆக இருந்தது. அது தற்போது சுமார் ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சிலிண்டர் வாங்குவதற்காக 3-வது நாளாக வரிசையில் நிற்பதாக முகமது ஷாஸ்லி என்பவர் கூறினார்.

இலங்கைக்கு சுமார் 5,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்களிடம் கடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளது என்று தெற்காசிய சென்ட்ரல் வங்கியின் கவர்னர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.