ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கினார் லாலு!  மனைவி, மகள்கள் மீதும் சி.பி.ஐ., வழக்குப்பதிவு| Dinamalar

புதுடில்லி : ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தபோது, அத்துறையில் பணி நியமனங்கள் செய்ததில், 1 லட்சம் சதுர அடி அளவுக்கு நிலங்களை லஞ்சமாக பெற்றதாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, லாலு, அவருடைய மனைவி மற்றும் மகள்களுக்கு சொந்தமான இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், 2004 – 09 காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது ரயில்வேயில், ‘குரூப் – டி’ பிரிவுக்கு பணி நியமனம் செய்ததில், பல்வேறு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் சி.பி.ஐ., அதிகாரிகள்ஆரம்பகட்ட விசாரணையை துவக்கினர். இதில், ரயில்வேயின் குரூப் – டி பிரிவில் தற்காலிக பணியாளராக சேர விண்ணப்பித்த சிலருக்கு, விண்ணப்பித்த மூன்றே நாட்களில் அவசர கதியில் பணி நியமனம் வழங்கப்பட்டது தெரிய வந்தது.பின், இவர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரமும் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஆதாயம் அடைந்தவர்களிடம் இருந்து, லாலு குடும்பத்தினர் பெயரில் நிலங்கள் லஞ்சமாக பெறப்பட்டுள்ளன. லாலுவின் மனைவி ரப்ரி தேவியின் பெயரில் மூன்று விற்பனை பத்திரங்கள், மகள் மிசா பாரதியின் பெயரில் ஒரு விற்பனை பத்திரம், மற்றொரு மகள் ஹேமா பெயரில் இரண்டு தான பத்திரங்கள் வாயிலாக இந்த நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மற்றொரு விற்பனை பத்திரம், ‘ஏ.கே., இன்போசிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவாகி உள்ளது. லாலு மனைவி ரப்ரி இந்த நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

இப்படி, பீஹாரின் பாட்னாவில் உள்ள 1.05 லட்சம் சதுர அடி நிலங்களை லாலு குடும்பத்தினர் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலங்களுக்கு அவர்கள் 3.75 லட்சம் முதல் 13 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த நிலங்களின் உண்மையான மதிப்பு 4.39 கோடி ரூபாய் என்பது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து, லாலு, ரப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா மற்றும் ரயில்வேயில் வேலை பெற்ற 12 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 18ல் வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில், டில்லி, பாட்னா, கோபால்கஞ்சில் உள்ள லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில், சி.பி.ஐ.,யின் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர்.

இந்த நடவடிக்கை குறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான மனோஜ்குமார் ஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது ஏற்கனவே எதிர்பார்த்தது தான். யாரையோ பயமுறுத்த, வேறு யாரையோ குறி வைக்கின்றனர். இதனால், நாங்களும் சரி; அவரும் சரி பயப்பட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.லாலுவின் மகன் தேஜஸ்வி, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து, பீஹார் அரசியலில் மாற்றம் ஏற்படப்போவதாக பேச்சு எழுந்தது. இதை தான் பெயர்களை குறிப்பிடாமல், மனோஜ்குமார் ஜா சூசகமாக தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.