காங்., முன்னாள் தலைவர் சித்து பாட்டியாலா சிறையில் அடைப்பு| Dinamalar

பாட்டியாலா : உச்ச நீதிமன்றத்தால் ஓராண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்ட பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாட்டியாலா சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்., முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 1988ல் பாட்டியாலா சாலையில் நடந்த சண்டையில், குர்னாம் சிங் என்பவரை முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. சில நாட்களில் குர்னாம் சிங் உயிரிழந்தார்.இதையடுத்து, சித்து மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 1999ல் விசாரணை நீதிமன்றம், அவரை கொலை வழக்கில் இருந்து விடுவித்தது.

மேல் முறையீட்டில், சித்து மரணத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட பஞ்சாப் உயர் நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்து மீதான மரணத்தை ஏற்படுத்திய வழக்கை தள்ளுபடி செய்து, அவருக்கு 1,000 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.இதை மறு ஆய்வு செய்யக்கோரி, உயிரிழந்த குர்னாம் சிங்கின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன், சித்துவின் வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி நேற்று மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘இந்த வழக்கில்,34 ஆண்டுகளுக்கு பின் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சித்துவுக்கு சில உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், சிறைக்கு செல்வதற்கு முன் அவற்றை சீர்செய்ய வேண்டி உள்ளது. எனவே, சரணடைய சில வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என கோரப்பட்டது.அதற்கு, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

எனவே, இந்த மனுவை தலைமை நீதிபதி முன் தாக்கல் செய்து, அவர் சிறப்பு அமர்வை அமைத்த பின் தான் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, பஞ்சாபின் பாட்டியாலா மாவட்ட நீதிமன்றத்தில், நவ்ஜோத் சிங் சித்து நேற்று மதியம்சரணடைந்தார். பின், பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.