மே-21 ஸ்ரீபெரும்புதூரில்…

சென்னை விமானநிலையத்துக்கு வந்து இறங்கினார் ராஜீவ் காந்தி. அங்கு நிருபர்களுக்கு அரை மணி நேரம் பேட்டி தந்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் கார் கிண்டியில் நேரு சிலை இருக்கும் கத்திப்பாரா அருகே காங்கிரஸ் தொண்டர்களால் வழிமறிக்கப்பட்டது. காரை விட்டு இறங்கி அவர்கள் தந்த மாலைகளை, கைத்தறி ஆடைகளை அன்போடு வாங்கிக்கொண்டார்.

அதன் பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் செல்லும் வழியில் நந்தம்பாக்கத்தில் தொண்டர்கள் மீண்டும் வழிமறிக்க, அங்கு இருந்த மைக்கில் “தமிழக மக்கள் என்னை இப்படி அன்போடு வரவேற்பதற்கு முதலில் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எல்லாம் மத்தியிலும் மாநிலத்திலும் நல்ல அரசு அமைய கை சின்னத்துக்கும், இரட்டை இலைச் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

May – 21 – 1991 Sriperumbudur

அதன்பிறகு சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தச் சொல்லி, ராஜீவே இறங்கி ஒவ்வொரு காராக யாரையோ தேடினார். அப்போது இன்னொரு காரில் வந்த ஜெயந்தி நடராஜன் ராஜீவ் காந்தியிடம் வந்து “யாரைத் தேடுகிறீர்கள்..?” என்று கேட்டதும், ‘நியூயார்க் டைம்ஸ்’ மற்றும் ‘கல்ஃப் நியூஸ்’ என்ற இரு வெளிநாட்டுப் பத்திரிகைகளின் பெண் நிருபர்கள் என்னைப் பேட்டி காண வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு காரில் பேட்டி தர நேரம் ஒதுக்கியிருந்தேன். அவர்களைத்தான் தேடுகிறேன்” என்றார்.ராஜீவ், “சரி… நான் அவர்களை அழைத்து வருகிறேன். நீங்கள் காரில் ஏறுங்கள்” என்று சொல்லி ராஜீவ் காந்தியை காரில் உட்கார வைத்த ஜெயந்தி நடராஜன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த பெண் நிருபர்கள் வந்த காரை அடையாளம் கண்டு,அவர்கள் இருவரையும் ராஜீவ் காந்தி வந்த காரில் ஏற்றினார்கள்.

அதன் பிறகு கார் புறப்பட்டது.வழிநெடுக காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் கூட்டம் ராஜீவ் காந்தியை வரவேற்றது. போரூரில் கூட்டம். திரளான மக்கள் நடுவே ராஜீவ் மேடையேறினார். எல்லோருக்கும் நாற்காலி போடப்பட்டது. வாழப்பாடி காலை நீட்டியபடி ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருந்தார்.

அப்போது ஒரு பத்திரிகை நிருபரே ‘ராஜீவ் முன்பு இப்படி ரிலாக்ஸ்டாக உட்கார்ந்திருக்கும் வாழப்பாடி, ஜெயலலிதா முன்னாடி உட்காருவாரா?’ என்று காமெண்ட் அடித்தார். ராஜீவ் வழக்கப்படி மேடையின் எல்லா பக்கமும் ஒடிச் சென்று மக்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்தார். மக்கள் “ராஜீவ் காந்தி வாழ்க” என்று கூக்குரலிட்டனர்.

அதன்பிறகு, தனக்கு அணிவித்த மாலை, துண்டுகளை எல்லாம் ராஜீவ் மக்களை நோக்கி வீசினார். அதன்பிறகு ராஜீவ் காந்தியின் காரில் இருந்த கைத்தறிப் பட்டாடைகளை ஜெயந்தி நடராஜன் எடுத்து வந்து ராஜீவ் காந்தியிடம் தந்தார். அவற்றையும் ராஜீவ் காந்தி பொதுமக்களிடம் வீசினார்.

அதன்பிறகு ராஜீவ் பேசினார், தா. பாண்டியன் உணர்ச்சிபூர்வமாக மொழிபெயர்த்தார்.

நிலையான ஆட்சியைத் தரமுடியாத காரணத்தினால் தேசிய முன்னணி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. தான் செய்த தவறுகளை மறைத்து பொய் காரணங்களைச் சொல்லிப் பிரச்னையைத் திசை திருப்பித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறது.

தி.மு.க-வை மக்கள் எந்த அளவு புறக்கணிக்கிறார்கள் என்பது அந்த ஆட்சி கலைக்கப்பட்டபோது மக்கள் தந்த ஆதரவே சாட்சி. தேச விரோத கட்சியான தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

அதற்கு நீங்கள் இரட்டை இலை மற்றும் கை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார் ராஜீவ். இந்தக்கூட்டத்தில் ராஜீவுக்கு வில்லிவாக்கம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜி.

காளன் நீண்ட மாலை, மலர்கிரீடம் சூட்டினார். ராஜீவ் அதை மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு போஸ் தந்தார். 

அதேபோல் போரூரில் கூட்டம் முடிந்து இறங்கும்போது, தனக்கு காங்கிரஸ் பிரமுகர் போர்த்திய விலை உயர்ந்த பட்டாடையை கீழே இருந்த வயதான ஒரு மூதாட்டிக்கு ஆதரவோடு போர்த்தினார்.

அந்த மூதாட்டி உணர்ச்சிப்பெருக்கோடு ராஜீவ் காந்தியை கைகூப்பி வணங்கிவிட்டு, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டுவிட்டார். ராஜீவும் அவரை ஆதரவாகக் கட்டிப்பிடித்தார். இந்த நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர்.

பூந்தமல்லியிலும் கூட்டம்…

மரகதம் சந்திரசேகர், தா. பாண்டியன், பூந்தமல்லி சட்டமன்ற வேட்பாளர் சுதர்சனம் எல்லோரையும் அறிமுகப்படுத்தி காங்கிரஸுக்கு வாக்களிக்கக் கேட்டுப் பேசினார். பூந்தமல்லி அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ராஜீவ் காந்திக்கு பெரிய எம்.ஜி.ஆர். படம் ஒன்றை வழங்கினார்.

ராஜீவ் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். ஒரு சிறுவன் ராஜீவ் காந்தியிடம் ஏதோ மனுவைத் தர மேடையில் ஏறினான். ராஜீவ் காந்தி அந்தச் சிறுவனை கவனிக்கவில்லை. அவர் தனக்கு அளித்த மாலைகளைப் பெற்றுக் கொள்வதில் மும்முரமாக இருந்தார். சிறிது நேரம் பார்த்த அந்தச் சிறுவன், ராஜீவ் கையைப் பிடித்து இழுத்தான்.

திரும்பிப் பார்த்த ராஜீவ் சிரித்த முகத்துடன் அந்தச் சிறுவனின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிக்கொடுத்து அவனிடம் இருந்த மனுவை வாங்கி பிரித்துப் பார்த்தார். பிறகு அந்த மனுவைத் தனது பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூரை நோக்கிப் புறப்பட்டது கார்….

ஊருக்கு ஒதுக்குப்புறமாக மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜீவின் வருகையை மக்களுக்கு அறிவிக்க வாணவேடிக்கை நடத்தினர்.

வெடிச்சத்தம் கேட்டதும், ராஜீவ் வந்துவிட்டார் என்பதை அறிந்த மக்கள் ஊரின் பல இடங்களிலிருந்து ஓடிவந்தனர்.

ராஜீவ், மெயின் ரோட்டில் இருந்த இந்திரா காந்தி சிலையைப் பார்த்ததும் இறங்கினார். அன்னையின் சிலைக்கு மாலை அணிவித்துக் கைகூப்பி வணங்கினார்… மூப்பனார் மெயின் ரோட்டில் வழக்கம்போல் ஒரு ஒரமாக நின்றிருந்தார். வாழப்பாடி மேடையைக் கவனிக்க ஓடினார்.

காரிலிருந்து இறங்கி சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட பாதையில் நடந்தபடி வந்த ராஜீவ், சவுக்குக் கட்டை தடுப்பு ஓரத்தில் மாலையுடன் காத்திருந்த தொண்டர்களிடமிருந்து மாலைகளை வாங்கியபடி முன்னேறினார், கூடவே அவரது பாதுகாப்பு அதிகாரி குப்தா, செங்கை அண்ணா (மேற்கு) எஸ்.பி-யான முகமது இக்பால் இருவரும் வந்தனர்.

ராஜீவை எதிர்நோக்கியபடி நடுத்தர வயதுடைய ஒரு ஆண், ஒரு பெண் இருவரும் பூக்கூடை டைப்பில் இருந்த ‘பொக்கே’யுடன் நின்றிருந்தனர். ராஜீவ் அந்தப் பூக்கூடை பொக்கேயை வாங்கக் கைநீட்டுகிறார்….. 

திடீரென பயங்கரமாக ஒரு வெடிச்சத்தம்!

மீண்டும் வாணவேடிக்கை என நினைத்து ஒரு விநாடி கழித்து திரும்பிப் பார்த்த போது, ராஜீவ் நின்ற இடத்தில் தீ ஜுவாலை, மணலும் சுழன்று அடித்தது. அதன் நடுவே பார்த்தபோது – ஏராளமான பேர் ஒருபுறம் சாய்வதும், பலர் இன்னொரு புறம் ஒடுவதும் நிருபர்கள் கண்களுக்குத் தெரிந்தன. சில விநாடிகளில் அந்த ஜுவாலை அடங்கியது.

எங்க பார்த்தாலும் அழுகுரல்….“ராஜீவ் எங்கே..?’ என்று மூபபனார், வாழப்பாடி, போலீஸ் அதிகாரிகள் தேடுகிறார்கள். சிதறிய நிலையில் பல உடல்கள்….. உயிர் ஊசலாடியபடி ஹீனஸ்வரத்தில் அங்கம் இங்குமாகக் குரல்கள். எல்லோரும் அழுதபடி ராஜீவைத் தேடுகிறார்கள்….. நிருபர்களும் தேடினார்கள். சிதைந்த உடல்களின் நடுவே ரோஸ் நிறக்கால்கள்……

May – 21 – 1991 Sriperumbudur

அந்தக் கால்களில் விசேஷமான பவர் ஷூ….. அந்தச் ஷூவின் சொந்தக்காரர் ராஜீவ் காந்தி….. பயந்தபடியே அந்தக் கால்களுக்கு அருகே இருந்த சிதைந்த தலையை மெள்ள மூப்பனார் திருப்பிப் பார்க்கிறார்.

“ஐயையோ….. ராஜீவ்…..” என்று கதற ஆரம்பிக்கிறார்…. ஜெயந்தி நடராஜனும் பதறியவாறு உறுதிப்படுத்தினார்.

தொண்டர்கள் போலீஸை “பாவிங்களா….. கோட்டை விட்டுட்டீங்களே….. தமிழ்நாட்டு மானம் போச்சே….. அவமானமாச்சே….. எங்க மாலைகளை எல்லாம் கூடப் பரிசோதனை பண்ணிட்டு கோட்டை விட்டுட்டீங்களே….” என்றபடி தாக்க ஆரம்பித்ததும்…. வேனையும், ஜீப்பையும் எடுத்துக்கொண்டு போலீஸ் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. நின்றவர்கள் ஐ.ஜி.

May – 21 – 1991 Sriperumbudur

(மூப்பனாரும், வாழப்பாடியும் கட்டிப்பிடித்து

அழுகிறார்கள்)

ராகவனும், இன்னொரு போலீஸ் அதிகாரியும் மட்டும்தான். ஐ.ஜி. ராகவனை இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் தியாகராஜன் என்பவர் “என் தலைவனைக் கொன்னுப்புட்டீங்களே’ என்று அடிக்க ஆரம்பிக்க, அவரை இழுத்துப்பிடித்து மூப்பனார் தடுத்தார்.

இன்னும் எங்காவது குண்டு இருக்குமோ என்று பலர் பயந்தபடி நடந்தனர். அரை மணி நேரம் எந்த நடவடிக்கையும் இன்றி அந்த இடமே ஸ்தம்பித்து நின்றது. அதன் பிறகு மூப்பனார் வேட்டியை மடித்துக்கொண்டு ராஜீவ் அருகே போனபோது, மூப்பனார் ஆதரவாளர் ஒருவர்

May – 21 – 1991 Sriperumbudur

“தலைவரே போகாதீங்க…. இன்னும் குண்டு ஏதாவது இருக்கப்போவுது” என்று இழுக்க, அவரை மூப்பனார் தள்ளிவிட்டு “தலைவனே போய்ட்டப்போ நான் இருந்து என்ன பண்ணப்போறேன்” என்று குமுறியவாறு சொல்லிவிட்டு, தனது மேல்துண்டால் ராஜீவ் உடலைப் போர்த்தினார்.

ஐ.ஜி. ராகவனை அழைத்தார்…. “என்ன செய்ய இருக்கிறீர்கள்? பாடியை இங்கு ரொம்ப நேரம் வைத்துக்கொள்ள முடியாது” என்று பரபரப்புடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மூப்பனார்.

தீயணைப்பு வண்டியிலிருந்து ஒரு ஸ்டிரெச்சர் எடுத்து வரப்பட்டது. ஐ.ஜி. ராகவன், வாழப்பாடி, மூப்பனார் மூவரும் ராஜீவின் குடல் வெளியே சரிந்து தலை நசுங்கிச் சிதிலமான உடலை வாரி ஸ்டிரெச்சரில் போட்டு அதே துண்டால் மூடினார்கள்.

May – 21 – 1991 Sriperumbudur

“போலீஸ்…. போலீஸ்’ என்று ஐ.ஜி. கத்திய பிறகும் யாரும் வாவில்லை.

அதன் பிறகு ராகவனே ஓடி ஒரு போலீஸ் வேனை அழைத்து வந்து ஸ்டிரெச்சரை மூப்பனாரும் வாழ்ப்பாடியும் தூக்கிவர வேனில் ஏற்றினார்கள். வேனில் மூப்பனாரும், வாழப்பாடியும் கூடவே ஏறினார்கள்.

வேனைச் சரியாக மூட முடியாமல் வேனின் கதவை ஒரு கையிலும், ராஜீவ் உடலை ஒரு கையிலும் பிடித்தபடி அழுதுகொண்டு மூப்பனார் வந்தார்.வேன், சென்னைப் பொது மருத்துவமனைக்கு வந்தது. “நர்ஸ்…. டாக்டர்…..’ என்று சத்தம் கேட்டதும், ‘என்ன ஏது’ என்று தெரியாமல் வீல் சேர் எடுத்து வந்தரர்கள்.

May – 21 – 1991 Sriperumbudur

“யோவ் என் தலைவன் பலியாயிட்டாரு. அவரை அழைச்சுவர வீல் சேரா எடுத்து வர்றிங்க என்று அந்தச் சக்கர நாற்காலியை ஒரு தொண்டர் தூக்கி வீசினார். ஏதோ கேட்ட ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை வாழப்பாடியின் உதவியாளர் நாச்சியப்பன் அடித்துத் துவைத்துவிட்டார்.

பாவம், அங்கிருந்த அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை. நிலைமை தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டனர் மருத்துவமனை அதிகாரிகள். ராஜீவ் உடலை ஒரு அறையில் வைத்துப் பத்திரப்படுத்தினர்.

வாழப்பாடியை அழைத்த மூப்பனார் கவர்னருக்குத் தகவல் தெரிவிக்கச் சொன்னார். மருத்துவமனை டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்குப் போன வாழப்பாடி, கவர்னருடன் தொடர்பு கொண்டார். முதலில் லைன் கிடைத்து அதன் பிறகு கட் ஆனது.

இரண்டாவது முறை முயற்சி செய்தபோது, கவர்னர் லைனில் கிடைத்துப் பேச ஆரம்பித்ததும், வாழப்பாடி ஹெட்போனை மூப்பனாரிடம் தந்தார்.

கவர்னரிடம் விஷயத்தை ஒரு வரியில் சொல்லி ‘You come here immediately”என்றார் மூப்பனார்.“இதுபோன்று சிதைந்த உடலை தைப்பதில் எக்ஸ்பர்ட்டான டாக்டர் முகப்பேரில் இருக்கிறார்.

அவர் வரவேண்டும்” என்றார்கள், எனவே, உடலைத் தைக்கும் ஐடியா கைவிடப்பட்டது. நேரம் ஒடிக்கொண்டிருந்தது. விடியற்காலை 4 மணி. அதற்குள் சோனியா தனது மகள் பிரியங்காவுடன் வருகிறார் என்ற தகவல் வந்தது.

சோனியா பொது மருத்துவமனைக்கு வருவதை மூப்பனார் விரும்பவில்லை. ஏற்கெனவே ராஜீவ் தங்குவதாக இருந்த விமானநிலைய லவுஞ்ச் அறைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

சோனியாவால் நம்பவே முடியவில்லை. அழுதபடியே வந்தார். மகள் பிரியங்காதான் அந்த நிலைமையிலும் அவரை ஆறுதலாக அணைத்தபடி வந்தார்.

ராஜீவ் உடல் இருந்த அறைக்கு ஓடிவந்தார். சோனியாவால் உடலைத் திறந்து பார்க்க முடியவில்லை….. கை, கால்கள் நடுங்கியவாறு இருந்தார். ஒருவழியாக பயந்தபடி திறந்துபார்த்தார்.

துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதபடி ஒரு மூலையில் சரித்து உட்கார்த்துவிட்டார். பிரியங்கா மட்டும் அந்த உடலைச் சிறிது நேரம் கண் இமைக்காமல் பார்த்துவிட்டு அவரே மூடினார். உடலை இங்கேயே பதப்படுத்தி அனுப்புவது பற்றிய பேச்சு எழுந்தது.

ஆனால், ஆந்திர முதல்வர் ஜனார்த்தன ரெட்டியும், ராஜீவின் ஆலோசகர்களில் ஒருவரான சுமன் துபேயும் அதற்கு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது’ என்றார்கள். ராஜீவ் உடலை எடுத்துக் கொண்டு ராணுவ விமானத்தில் ஏற்றினார்கள்.

இரவு சிரித்த முகத்துடன் ராஜீவ் சென்னைக்கு வந்தார். ஆனால், விடியற்காலை சிதைத்த அவர் உடல்தான் டெல்லிக்குத் திரும்பியது.

“எனக்கு வந்த டெலிபோன்!”

‘குண்டு வெடித்த சம்பவத்தில் தி.மு.க. சம்பந்தப்பட்டிருக்கிறது. சில மூத்த தலைவர்கள் இந்த சதித்திட்டம் சம்பந்தமாக ஆலோசனையில் கூடக் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

நேற்று ஸ்டாலின் ஒரு ஊழியர் கூட்டத்தில் பேசும்போது கூட ‘நாளை ஒரு முக்கியமான விஷயம் நடக்கப்போகிறது. எனவே, நம்ம ஆட்கள் ஒல்லாம் தலைமறைவாகிவிடுங்கள்’ என்று வாழப்பாடி பிரஸ் மீட்டில் குற்றஞ்சாட்னார்.

ஆனால் “இது முழுக்க முழுக்க அபாண்டமான குற்றச்சாட்டு” என்று ஸ்டாலின் மறுத்திருக்கிறார்.”குண்டு வெடித்தவுடன் போலீஸ் நடந்துகொண்டதும் மிகவும் மோசம்.

போலீஸ் தங்களது வேன்களையும், ஜீப்களையும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள். இதுதான் போலீஸின் லட்சணம், இனிமேல் அகதிகள் என்று ஒரு இலங்கைத் தமிழர்கூட. தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. அவ்வளவு பேரும் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் சொல்வேன்” என்றும் செர்ன்னார் வாழப்பாடி. 

வாழப்பாடி நிருபர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கவர்ச்சி நடிகை மாயா மண்டைக்கட்டுடன் ஓடிவந்து. “எனக்கு இந்த விஷம் முன்னாடியே தெரியும். அதுபற்றிப் பேசணும்” என்றார் அழுதபடி.அப்போது வாழப்பாடி, “இரும்மா…. பத்திரிக்கைகாரங்களை அனுப்பிட்டு நீ சொல்றதைக் கேட்கிறேன்” என்றார். ஆனால் “இவங்களுக்கும்.

அது தெரியணும்” என்று மீண்டும் மீண்டும் மாயா வற்புறுத்த, “என்ன…?” என்று வாழப்பாடி கேட்டார். “எனக்கு நாலரை மணிக்கு ஒரு போன் வந்துச்சு. அதுலே ‘இன்னிக்கு ராஜீவ்’ காந்தி என்ன கதி ஆகப்போறார், பாருடி….

அதுக்கப்புறம் நீ எப்படி தேர்தல் பிரசார மீட்டிங், பேசுவே’ன்னு ஒருத்தர் பேசிட்டு போனை வெச்சுட்டார். இதைச் சொல்றதுக்கு தான் நேற்று காங்கிரஸ் கட்சி ஆபிஸுக்கு போன் கூடச் செய்தேன்.

ஏழு மணிக்கு யாரோ செல்வம்னு ஒருத்தர் எடுத்தாரு. அவர்கிட்டகூட சொன்னேன்…” என்று சொன்ன மாயா தொடர்ந்து, “நான் யாரு… கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கேன்….. கட்சித் தொண்டர்தானே….. அதான் என் பேச்சை யாரும் கேட்கலே….. இப்போ தலைவர் பலியாயிட்டார்’என்றார் அழுதபடி!

வாழப்பாடியை எச்சரித்த உள்ளுணர்வு!

ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதே வாழப்பாடி விரும்பாத ஒன்று. ‘பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது மிகுந்த சிரமம்….. வேறு இடத்தில் எங்காவது வைக்கலாம்’ என்று கடைசிவரை வாழப்பாடி வாதாடிப் பார்த்தார். ஆனால், ‘ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் நிச்சயம் நடக்கும்….

ராஜீவ் அங்கு இரவு தங்குகிறார் என்று டெல்லி மேலிடம் உறுதியாகச் சொல்லிவிட்டது. கூட்டம் நடைபெற இருந்த அன்று காலை ராஜீவ் நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் மார்கரெட் ஆல்வாவுடன் டெலிபோனில் டெல்லிக்குத் தொடர்பு கொண்டு வாழப்பாடி, “ஏற்பாடுகள் எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை.

எனவே, கூட்டத்தை ரத்து செய்துவிடலாம்” என்று வாதாடினார். ஆனால் அப்போதும், ‘ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் நடக்கும்” என்றே மார்கரெட் ஆல்வா அடித்துச் சொன்னார்.“

ராஜீவ் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் எதுவுமே சரியில்லை….. அதையாவது மாற்றுங்கள். ராஜீவ் கூட்டம் முடிந்ததும் சென்னையில் மீனம்பாக்கம் வி.ஐ.பி. அறையில் தங்கட்டும்…. அதற்காவது அனுமதியுங்கள்” என்று வாழப்பாடி கெஞ்சினார்.

அதற்கு மட்டும் மாலை நாலேகால் மணிக்கு டெல்லி அனுமதி வழங்கியது. வாழப்பாடிக்கு ஆரம்பம் முதலே ஏதோ நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ. அன்று மதியம் மூன்று மணிக்கு கவர்னரைச் சந்தித்து, ‘ராஜீவ் வருகைக்குப் பாதுகாப்பு பலமாக இருக்கவேண்டும்’ என்று கவலைவுடன் கேட்டுக் கொண்டார். 

கவர்னர் பீஷ்ம நாராயண் சிங் வாழப்பாடி முன்னிலையிலேயே டி.ஜி.பி-யை அழைத்துப் பாதுகாப்பு சமபந்தமான ஏற்பாடுகளை விசாரித்து இன்னும் கொஞ்சம் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிட்டார்.

தோழமைக் கட்சியான அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் யாரும் ராஜிவ் காத்தியை விமான நிலையத்துக்கு வரவேற்கவும் வரவில்லை. அவர் இறந்த பிறகும் எட்டிப் பார்க்காதது காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிக்கே வருத்தமாக இருந்தது.

– ஜாசன் படங்கள். மேப்ஸ்

(29.05.1991 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.