மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சி – பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்

புதுடெல்லி: முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்ப சில கட்சிகள் முயற்சிப்பதாகவும் அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜக அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து, பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம்.

முக்கிய பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசை திருப்ப சில கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவற்றின் பொறியில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது. ஜனசங்கத்தின் காலத்தில், நம்மைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் நமது தொண்டர்கள் சிரமப்பட்டு புதிய இந்தியாவை கட்டியெழுப்பி உள்ளனர்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி நடக்கிறது.

பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்கை நாம் நிர்ணயித்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இந்தியா கனவுகளால் நிரம்பிய நாடாகப் பார்க்கப்படுகிறது.

உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. ஏற்கெனவே இருந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். 2014- ல் புதிய அத்தியாயத்தை எழுத மக்கள் முடிவு செய்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தினர்.

நாட்டு மக்களிடையே இழந்த நம்பிக்கையை பாஜக மீண்டும் விதைத்தது. மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.