இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரியதொரு மனிதாபிமான உதவித்தொகுதி 2022 மே மாதம் 22ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
9000 மெட்ரிக்தொன் அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் உள்ளடங்கிய இத்தொகுதி, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
2. 2022 மே 18ஆம் திகதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து வழியனுப்பிவைத்தார். தமிழக அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 40000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் இது முதற்தொகுதியாக அனுப்பி வைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த பங்களிப்பானது 5.5 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியானதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3. தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4. இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளுடன் துணைநின்று, இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் பன்முக முயற்சிகளை பூரணப்படுத்துவதாக, இந்திய மக்களிடமிருந்து வழங்கப்படும் இந்த உதவி அமைகின்றது. பல்வேறு அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் சமூக அமைப்புகள் பல தமது உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளன. இலங்கைக்காக இந்திய மக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அபரிமிதமான இந்த ஆதரவு, இவ்வருடம் ஜனவரி முதல் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவிக்கு மேலதிகமாக அமைகின்றது. அத்துடன் இதற்கு மேலதிகமாக மருந்துப் பொருட்கள், உலருணவு நிவாரணங்கள் போன்றவை இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
20 மே 2022