புதுடெல்லி: உ.பி.யில் சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கில் கியான்வாபி மசூதியினுள் களஆய்வு செய்ய வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த களஆய்வுக்கு தடை கோரி மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதற்கு முன்பாக மே 6, 7 மற்றும் 14 முதல் 16 வரையிலான தேதிகளில் கியான்வாபியின் களஆய்வு நடந்து முடிந்தது. இத்துடன், மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாகவும் அப்பகுதி கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டது.
இதனால், ஒசுகானாவில் சிவலிங்கத்தை பாதுகாக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தொழுகை நடத்த இடையூறுகள் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. பிறகு நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த உத்தரவு வரும் வரை, சிவில் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க கூடாது என உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஜிமா கொஹலி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘சிவில் நீதிமன்றத்தில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி வழக்கை விசாரிப்பார். 25 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நீதிமன்றத்தில் இந்துக்கள் தரப்பின் வாதம் சரியா இல்லையா என்பது முடிவு செய்யப்படும். உச்ச நீதிமன்றத்தால் மே 17-ல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு அடுத்த 8 வாரங்களுக்கு தொடரும்’ என்று தெரிவித்தனர்.
அதுவரையும் ஒசுகானாவின் நடுவிலுள்ள சிவலிங்கத்தை மத்திய போலீஸ் பாதுகாப்பு படை பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை இரண்டாம் வாரத்தில் உச்ச நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரிக்க உள்ளது.
இந்த வழக்கை, மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன் படி தள்ளுபடி செய்ய வேண்டும் என மசூதியின் நிர்வாகமான அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியினர் கோரியிருந்தனர். இதன் மீது வாரணாசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் வாதத்தில் மசூதி நிர்வாகத்தின் வழக்கறிஞர் ஹுஜைபா அஹமதி கூறும்போது, ‘கியான்வாபி வழக்கில் ஒரு தரப்பை மட்டும் நீதிமன்றம் பார்க்க கூடாது. இவ்வழக்கின் முடிவுகளின் தாக்கம் மேலும் நான்கைந்து மசூதிகள் மீது ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம், வழிபாட்டுத் தலங்களை மாற்றியமைத்து நாட்டின் மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சிக்கப்படுகிறது’ என்றார்.
தகவல்கள் கசிவு
கியான்வாபியில் நடைபெற்ற களஆய்வின் அறிக்கையின் குறிப்பிட்ட தகவல்கள் மட்டும் கசிவதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது. சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் முஸ்லிம்கள் தரப்பில் நீதிமன்ற அமர்வு எடுத்துரைத்தது.