Courtesy: ஜெரா
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு ஆண்டுகள் பதின்மூன்று. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் தரப்பும் சரி, இலங்கை என்கிற நாடும் சரி எதிர்கொண்ட சவால்கள் எவையென ஆராய்வது காலத்திற்குப் பொருத்தமானதாகும்.
தமிழர்கள் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, நிழல் அரசொன்றையே அமைத்திருந்த புலிகள், தம் மௌனிப்பின் இறுதிப்பொழுது வரைக்கும் கொள்கைகளிலிருந்து விலகவில்லை. தம் போராட்டப் பயணத்தைக் கைவிடவுமில்லை.
இனத்தின் விடுதலை மீது அசையாத பற்றுறுதி கொண்டவர்கள், அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் என்ன நடந்தது?
புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர், தாயகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தமிழக ஈழ ஆதரவு அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் போன்றோர் இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்புவார்கள்.
தமிழர்களை விடுதலைப் பயணத்தை ஜனநாயகத் தளத்தில் தொடர்ந்தும் கொண்டு செல்வார்கள் என்றே நம்பப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள், 2008 ஆம் ஆண்டு நிகழ்த்திய இறுதி மாவீரர் நாள் உரையிலு்ம அதனையே வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் யதார்த்தத்தில் அந்த நம்பிக்கைப் பொய்த்துப்போனது. தமிழர்கள் சரணடைந்தனர்.
அரசியல், பொருளாதாரம், பண்பாடு என அனைத்து வாழ்வியல் விழுமியங்களிலும் சரணடைந்தனர். தமிழ் தேசம், தேசியம், சுயநிர்ணயம் போன்ற விடயங்களில் கருத்தியல் தளத்திலிருந்தே சிதைவுக்குள்ளாக்கும் சதிகளை இலங்கை அரசும், பிராந்திய நாடுகளும் மேற்கொண்டன.
இதனை எதிர்த்து, தமிழர்களை விடுதலைப் பந்தத்தை எடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பிலிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்களின் நம்பிக்கையை இழந்தது. அதற்கு இருந்த அரசியல் பொறுப்புக்கூறலை கணக்கிலெடுக்காமல், நாடாளுமன்றக் கதிரைக்காக மட்டும் களத்தில் நின்றது. அதற்காக மட்டும் மக்களிடம் கையேந்தியது.
பல்லாயிரம் உயிர்களைத் தியாகித்து வளர்க்கப்பட்ட தமிழ் தேசியம் என்கிற இனவிடுதலை ஊக்கியை தேர்தல் அரசியலில் வாக்குச் சேகரிக்கும் விளம்பரமாக மட்டும் பயன்படுத்தியது.
பணமும், அதிகாரமும் வாய்க்கப்பெற்றவர்களின் கூடாரமாகியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தெற்கில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்கும் கூட்டமைப்பு குறிப்பிடத்தக்களவு பங்காற்றியது.
2015 இல் நல்லாட்சி என்கிற பேயாட்சியைக் கொண்டுவரக்கூட தமிழர்களின் வாக்குச் சீட்டை எவ்விதப் முன்பிணையுமின்றிப் பயன்படுத்தியது. பேரம்பேசலின்றி விழலுக்கிறைத்தது. சிங்கள அரசின் கழுத்து மீது இறுகிவந்த பல்வேறு கயிறுகளையும் தன் கையைக் கொண்டே அறுத்தும் வீசியது.
இறுதியில், “நம்பினோம், ஏமாற்றிவிட்டனர்” என்ற 70 ஆண்டுகால ஈழத்தமிழ் மிதவாத அரசியலின் வாய்ப்பாட்டைத் தமிழர்களுக்குப் படித்துக்காட்டியது.
மறுபுறத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தம் தாயக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வர் என எதிர்பார்க்கப்பட்டது. அங்கேயும், “திண்ணை எப்போது காலியாகும்” என்ற நிலைப்பாடுதான் தென்பட்டது.
புலிகளின் சொத்துக்களை வைத்திருந்த அமைப்புகள், தனிநபர்கள் அச்சொத்துக்களை தனியுடமையாக்கிக்கொண்டு கரையேறினர். அமைப்புகள் தங்களுக்குள் அடிபட்டு சிதைந்து போயினர். ஆங்காங்கே தென்பட்ட இன ஓர்மம்மிக்க சில அமைப்புக்களும், தனிச்செயற்பாட்டாளர்களும் மிகப்பெறுமதியான அரசியல் வேலைகளை முன்னெடுத்தனர்.
இன்றைக்கும் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் எனச் சைகை காட்டுவதற்கு இவர்களது தீரமிகு செயற்பாடுகளே காரணமாகும்.
முதுகெலும்பு முறிக்கப்பட்ட தாயகத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பல்லாயிரம் நல்ல திட்டங்கள் புலம்பெயர் தமிழர்களிடமிருந்தன. நிதியாகவும், பொருள் உதவியாகவும், வாழ்வாதார உதவியாகவும், இடர்கால உதவியாகவும், கல்வி மீளெழுச்சிக்கான மாதாந்தக் கொடுப்பானவுகளுக்காகவும் கோடிக்கணக்கான பணத்தை வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் அனுப்பினர். இதனால் பண்ணைகள், சிறுகைத் தொழில் மையங்கள், கடைகள் அமைக்கப்பட்டன.
இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து தமிழர்கள் ஓரளவிற்காவது தப்பித்து வாழ்வதற்கு இவ்வுதவிகள் துணைபுரிந்திருப்பதை மறுக்கவியலாது.
இதில் இடம்பெற்ற குறைபாடு என்னவெனில், புலம்பெயர் தமிழர்களின் நிதியளிப்பு, சரியான வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா, திட்டங்கள் வெற்றியளித்திருக்கின்றனவா, அதனை அடுத்த கட்டப் பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டுசெல்வது எப்படி என்பவற்றுக்கான பதில்களை வெளிப்படுத்தும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாமைதான்.
புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் தாயகத் தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும் இருந்த ஒரே நம்பிகை தமிழகம்தான்.
ஈழ விடுதலையை தன் உணர்வால் ஏந்திச் சென்ற தமிழகத்தினர், தம் இன்னுயிர்களை தீயிற்கு ஈகித்திருக்கின்றனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலை குறித்து சதாகாலமும் அக்கறையோடும், பொறுப்புணர்வோடும் செயற்பட்டு வந்திருக்கின்றனர்.
புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் தமிழகத்தாரின் ஈழ ஆதரவு நிலைப்பாடும் சதிகளுக்குள் சிக்கிக்கொண்டது.
புலிகளின் நேரடி செயற்பாட்டாளர்களாகவே இயங்கிவந்தவர்கள்கூட கட்சி மாறினார்கள். காட்சியை மாற்றினார்கள். பொய்யான தகவல்களைப் பரப்பி, தமிழக உணர்வலையை திசைமாற்றினார்கள். தங்களுக்குள் மோதுண்டு சிதறிப்போனார்கள். இறுதியாக, ஈழ விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவுக்குள் கொண்டு சென்று கரைக்கும் நிலைக்கே வந்துவிட்டனர்.
தாயகம், புலம்பெயர் தளம், தமிழகம் ஆகிய முப்பரப்புக்களிலும் இருக்கின்ற ஒரே நம்பிக்கை, அங்கொன்றும் இங்கொன்றுமாக இன ஓர்மம் மிக்க தலைமுறையொன்று உருவாகி வருகின்றமைதான்.
தமிழ் தேசிய வெளியிலும் மக்களை அரசியல் ஈடுபாட்டோடு அணிதிரட்டும் வேலைகளிலும் அத்தலைமுறை களத்தில் இறங்கிக் காரியமாற்றுகின்றது.
இந்த அணிதிரட்டல் செயற்பாடுகளுக்கு எழுக தமிழ், நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிடத்தக்க உதாரணங்களாகக் கொள்ளலாம்.
இந்தச் செயற்பாடுகள் கனதிமிக்க அரசியலாக மடைமாற்றம் செய்யப்படல் வேண்டும். இக்கூட்டிணைவின் பெறுமதிக்கு மதிப்பளிக்கப்படல்வேண்டும்.
புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னரான இலங்கையில், “கொடிய பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட” என்ற வாக்கியமே அரசியல் முதலீடாகப் பயன்படுத்தப்பட்டது.
ராஜபக்சவினரின் அதிகார இருப்பிற்கும், இலங்கை சமூகங்களுக்குள் ஆழமாக ஊடுருவிய இராணுவமயமாக்கலுக்கும், தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட பௌத்தமயமாக்கத்திற்கும், சிங்கள அடாத்துக் குடியேற்றங்களுக்கும் இந்த வெற்றி பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
கதாநாயகத்தனம் பொருந்திய மகாவம்ச மனோநிலை அரசியலுக்கு மேலும் ருசியேற்றும் போதையாகப் போர் வெற்றி பயன்படுத்தப்பட்டது.
அப்பாவி சிங்கள மக்கள் இந்தப் போதையில் மிதந்திருக்க, இலங்கை துரித அபிவிருத்தியை நோக்கி்ப் பயணிப்பதாகக் காட்சியொழுங்கு மாற்றப்பட்டது.
சீனா, இந்தியா, அமெரிக்கா என இந்தத் துரித அபிவிருத்திக்குப் போட்டிபோட்டுக் கடன்களை வழங்கின. போர் காலத்தில் ஆயுதக் கொள்வனவிற்கும், இராணுவ செலவுகளுக்கும் வழங்கப்பட்ட கடன்களுக்கு மேலதிகமாக இவை கிடைத்தன.
வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, வட்டியை எப்படி செலுத்துவது, இக்கடன்களின் நோக்கம் என்ன, இந்தக் கடன்களின் பின்னால் மறைந்திருக்கும் பிராந்திய நாடுகளது அரசியல் நலன்கள் எவை என்பது குறித்தெல்லாம் துளியளவும் சிந்திக்காமல் ராஜபக்சவினர் செயற்பட்டனர்.
போர் வெற்றிக்குக் கிடைத்த பரிசுகளாக அவற்றைப் பார்த்தனர். அரசியல்வாதிகளுக்கு வருமானம் தரும் நல்லதொரு தொழிலாகத் துரித அபிவிருத்தித் திட்டங்களை அவர்கள் வடிவமைத்தனர்.
ஆனால் வாரிவாரி கடன்கொடுத்த நாடுகள், இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தீவின் கரையோரத்தின் பெரும்பகுதியை தம் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்துவிட்டன.
கடல்சார் இறைமையை இலங்கை இழக்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன. கடன்பெற்று போரை நடத்தி அதில் பெற்ற வெற்றியானது, கடனை மீளச் செலுத்த முடியாது, வெற்றிபெற்ற நாட்டையே இழக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.
இவ்வாறு புலிகளற்ற இலங்கையானது கடன்களாலும், அந்நிய ஆக்கிரமிப்புக்களினாலும், வீங்கிய இராணுவப் பெருக்கத்தாலும், ஊழல்களாலும் நிரம்பியிருக்கிறது. இதனால் ஐந்து வருடங்களுக்கு ஓர் ஆட்சியை நிம்மதியாகக் கொண்டுசெல்ல முடியாதளவுக்குப் புவிசார் அரசியலில் போட்டியிடும் நாடுகளது தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன.
சீனா விரும்பும் ஆட்சியாளரை இந்தியாவுக்குப் பிடிக்காது, இந்தியாவுக்குப் பிடிக்கும் ஆட்சியாளரை சீனாவுக்குப் பிடிக்காது என்கிற தீர்க்கமுடியாத சிக்கலில் இலங்கை சிக்கவைக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் புலிகளின் ஆதிக்கம் இருக்கும் வரையில் இவ்வாறானதொரு நிலையை இலங்கை அரசு எதிர்கொண்டிருக்கவில்லை.
இவற்றை விளங்கிக்கொண்ட சிங்கள மக்கள் இந்த ஆட்சியாளர்களை விரட்டவேண்டும் எனத் தெருவில் இறங்கியிருக்கின்றனர்.
உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும் களத்தில் இறங்கிய சிங்கள மக்கள் தெளிவானதொரு அரசியலைக் கற்றிருக்கின்றனர். புலிகள் இருக்கும்வரைக்கும் தாம் இப்படியொரு கஸ்ரத்தை அனுபவித்ததில்லை என நெஞ்சை நிமிர்த்திக் கூறுகின்றனர்.
இனவாதத்தைத் தூண்டி தம்மை ஆட்சிசெய்து, தம் நாட்டையே அழித்த ராஜபக்சவினர் அரசியல் அரங்கிலிருந்தே விலகியோட வேண்டும் என்கின்றனர்.
தெற்கிலிருந்து தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட போர் தவறானது என்கின்றனர்.
ஆகவே புலிகள் மௌனித்த பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் நிகழ்ந்த பெரும் அரசியல் மாற்றம் இதுதான்.
பல நூற்றாண்டுகாலமாக மிகவும் இறுக்கமான முறையில் வளர்க்கப்பட்டு வந்த மகாவம்ச மனோநிலைக்கு விழுந்திருக்கின்ற அடியாகவே இதனைப் பார்க்கவேண்டும்.
சிங்கள மக்களின் இந்த அரசியல் புரிதலானது ராஜபக்சக்களை வெளியேற்றுவதற்கான வெறும் நாடகமாகவே மாறினாலும், அது குறித்துத் தமிழர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.
சிங்கள மக்கள் யாவரும் தாம் தமிழர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குகின்றோம் என்பதை இதயபூர்வமாக அறிந்துகொண்டு, தம் விருப்பின்பேரிலேயே அதனை மேற்கொள்கின்றனர் என்ற முடிவுக்குத் தமிழர்கள் வரமுடியும்.
பதின்மூன்று ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த பௌத்த மேலாதிக்கவாத மாற்றமும் போலியானதெனில், இனியொருபோதும் அதில் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் வரமுடியும்.