‘லாக்கப் டெத்’ தவிர்ப்பது எப்படி? 9 மாவட்ட அதிகாரிகளுக்கு டி.ஜி.பி தலைமையில் பயிற்சி

க. சண்முகவடிவேல்

காவல் நிலையத்தில் நடைபெறும் மரணங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கருத்தரங்கில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள், திருச்சி மாநகரிலுள்ள காவல் உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவல்நிலைய மரணங்கள் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், துணை இயக்குனர், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்தக் கருத்தரங்கில் கலந்துக் கொண்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு செய்தியாளர்களை பேசியதாவது: “கடந்த 10 ஆண்டுகளில், தமிழக காவல் நிலையங்களில் 84 மரணங்களும், அகில இந்திய அளவில் 909 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. காவல்துறை வன்முறையை கையாளக் கூடாது என ஏற்கனவே முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால் தற்போது இந்த பயிற்சி முகாம் காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

காவல் நிலையத்தில் எப்போதாவது நடக்கக்கூடிய எல்லா மரணத்திற்கும் காவல்துறையினரால் நிகழ்ந்ததாக குறிப்பிட முடியாது. சிலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மரணமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு கொடுக்கத்தான் காவல்துறை உள்ளது. பொதுமக்கள் காவல்துறையை தாக்கும்போது அப்போது தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது, அந்த நேரத்தில் எப்படி கையாள்வது குறித்து அவர்களுக்கு கராத்தே, வர்ம கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய சிறையில் இருக்கும் கைதிகள் இனி மரணம் அடையக் கூடாது என்பதற்காக இந்தவிழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. தேவை ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் பலத்தை பயன்படுத்தலாம். குற்றவாளிகள் காவல்துறையினரை பார்த்து பயப்பட வேண்டும். நல்லவர்கள் காவல்துறையினரை கண்டு அச்சப்பட தேவையில்லை.

ஒரு லட்சத்து 13 ஆயிரம் காலர்களுக்கு இது போன்ற மனநலம் குறித்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் மன இறுக்கத்தைப் போக்குவதற்காகவே ஒரு நாள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது .

ஆபத்து வரும்போது காவலர்கள் திறமையாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கள்ளச்சாராயம் இருக்கிறது. அதனை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறை புதிதாக 10,000 காவலர்கள் பணியில் சேர இருக்கிறார்கள். அவர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.