இந்திய எல்லையில் புதிய பாலம் அமைத்துள்ள சீனா – சட்டவிரோதம் என மத்திய அரசு விமர்சனம்

சீனா இந்தியாவின் எல்லைப் பகுதியில் பாலம் கட்டியதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தியுள்ள மத்திய அரசு, சீனாவின் நடவடிக்கை சட்டவிரோதம் எனவும் விமர்சித்துள்ளது. இந்நிலையில் எந்த இடத்தில் சீனா பாலத்தை அமைத்திருக்கிறது? அதனால் இந்தியாவிற்கான பாதிப்புகள் என்ன? உள்ளிட்டவற்றை காணலாம்.
இந்திய எல்லைகளில் அத்துமீறல்களை செய்வது சீனாவின் தொடர் நடவடிக்கையாகவே இருந்துவருகிறது. சட்டவிரோதக் குடியிருப்புக்கள், ராணுவ முகாம்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை அமைத்துவந்த சீனா தற்போது ஒருபடி முன்னேறி பாலத்தைக் கட்டியிருக்கிறது. இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் அமைந்திருக்கிறது பேன்காங் டிசோ விஜய். இப்பகுதியின் குறுக்காக இந்த பாலத்தை சீனா கட்டியுள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. அதுவும் ஏரியின் இரு கரைகளை இணைக்கும் வகையில் இந்தியப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இடத்தில் இந்த பாலத்தைக் கட்டியுள்ளது. ஏற்கெனவே இதே பகுதியில் சிறிய பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மிகப்பெரிய பாலமாக இரண்டாவது பாலத்தையும் சீன நாடு கட்டியுள்ளது.
image
இன்னும் சொல்லப் போனால் முதலில் அமைக்கப்பட்ட பாலத்தை பயன்படுத்தி அதன்வழியாக கிரேன்கள் மற்றும் புதிய பாலத்தை கட்டுவதற்கான உபகரணங்களை எடுத்துவந்து இந்த இரண்டாவது பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதலில் கட்டப்பட்டிருந்த பாலத்தில் இலகு ரக வாகனங்களும் ராணுவ வீரர்கள் மட்டுமே வரும் வகையில் இருந்த நிலையில் தற்போது கட்டப்பட்டு இருக்கக்கூடிய இரண்டாவது பாலத்தின் வழியாக பெரிய டைரக்டர்கள் முதலான கனரக போர் வாகனங்களை எடுத்து வரமுடியும் எனச் சொல்லப்படுகிறது.
image
மேலும் ஏரியின் தெற்கு கரைகளை சுற்றிவருவதற்கு 180 கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டியிருந்த நிலையில், அது தற்பொழுது 40 முதல் 50 கிலோமீட்டராக சுருங்கியுள்ளது. இதன்மூலம் சீன ராணுவத்திற்கு எரிபொருள் மிச்சம் மற்றும் நேர விரையம் ஆகியவை தவிர்க்கப்படும். மேலும் இந்த இரண்டாவது பாலத்தை அடிப்படையாக கொண்டு மேலும் பல கட்டுமானங்களை கட்டுவதற்கும் சீனா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ஏரியைச் சுற்றி பல பகுதிகளில் நிரந்தர குடியிருப்புகளையும் கிராமங்களையும் சீனா அமைத்துவரும் நிலையில், அதனை இன்னும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
image
எனினும் சீனா உடைய இந்த புதிய பாலத்தை சட்டவிரோதம் என தெரிவித்துள்ள மத்திய அரசு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இந்திய எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வேலைகளை சீனா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.