புதுடெல்லி: டெல்லியில் நள்ளிரவு பெய்த பலத்த மழையால் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்ற விமானம் உட்பட 12 விமானங்கள் திருப்பிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் டெல்லி – என்சிஆர் பகுதியில் நேற்றிரவு பலத்த இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. மோசமான வானிலை காரணமாக டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விமானம் உட்பட குறைந்தது 12 விமானங்கள் தற்போது திருப்பி விடப்பட்டுள்ளன. தகவலின்படி, ஏழு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், நான்கு விமானங்கள் லக்னோவிற்கும், ஒரு விமானம் அகமதாபாத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வானிலை மைய அறிக்கையின்படி, டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதன்பிறகு சில நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.