முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கேரள மாநில முன்னாள் எதிர்கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் சென்னிதலா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்று ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 31வது ஆண்டு அமரர் ராஜீவ் காந்தி நினைவு ஜோதியையும், வடசென்னையில் இருந்து ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை மூலமாக கொண்டுவரப்பட்ட ஜோதியையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி அனைவரும் எடுத்துக்கொண்னர்.
இதனைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்துக்களின் புனித நதியான கங்கையில் இருந்தும் இஸ்லாமியர்களின் புனிதஸ்தலமான மெக்கா ஜம் ஜம் நதியிலிருந்தும், கிறிஸ்துவர்களின் ஏசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற ஜோர்தான் நதியிருந்தும் கொண்டுவரப்பட்ட புனித நீரை அமரர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கேரள மாநில முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் ஊற்றினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.