பொன்னியின் செல்வன் படம் குறித்து பரவிய வதந்தி
இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற சரித்திரப் படத்தை இயக்கி இருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வனுக்காக படமாக்கப்பட்ட பல காட்சிகள் மணிரத்னத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அதனால் அந்த காட்சிகளை அவர் மீண்டும் ரீசூட் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்தத் தகவலை படக்குழு மறுத்துள்ளது. பொன்னியின் செல்வனுக்காக படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் மணிரத்னத்துக்கு திருப்தியாக இருப்பதாகவும், தற்போது அவர் இறுதிக்கட்ட பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்து அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.